2014年11月23日星期日

பல கிறுக்கல்களில் சில - 15 "Clean India - Cleaning the street with Kuppan anna"

"Clean India - Cleaning the street with Kuppan anna"





ஜக்கிரியா காலனி, 2ஆம் தெரு, கோடம்பாக்கம், சென்னை. அக்டோபர் 2, 2014.

                                                                 
                                                                  ஜன்னல்களின் இடுக்குகளை பிளந்து கொண்டு உள்ளே நுழையும் சூரிய கதிர்கள், பிரகாஷின் முகத்தை பதம் பார்க்க, அருகில் உறங்கிக் கொண்டிருந்த தனது நண்பர்களிடத்து இருந்த போர்வையை உருவி முகம் மறைத்து மீண்டும் படுத்தான். போர்வை உருவப் பட்டதில் தூக்கம் கலைந்தது பாண்டியராஜனுக்கு. தலையணையில் மீண்டும் முகம் புதைத்து படுத்தான் அவனும். அவர்கள் வீட்டுக்கு எதிரே இருக்கும் கிறித்தவ வழிபாட்டு ஆலய ஒலிபெருக்கியில் இருந்து "...... அவரின் செயல்களும் வாழ்வும் கர்த்தருக்கு ஒத்தது. விஷ்ணுவுக்கு எப்படி பல அவதாரங்களோ அது போல நமது கர்த்தரின் மறு அவதாரம் காந்தியடிகள் எனச் சொன்னால் அது மிகையல்ல... அவர்..." என்று ஒருவர் பேசுவது ரத்தன் தேவ் காதுகளை இம்சித்தது. எரிச்சலில் எழுந்த அவன் அறைக்கதவை வேகமாய் திறந்தான். கதவில் இடிபட்டு பாட்டில்கள் உருண்டன. கீழிருந்த காலி சிகரெட்டு பாக்கெட்டுகளையும் கவனிக்காது மிதித்துச் சென்று, பால்கனியில் இருந்து வெளியே எட்டிப் பார்த்தான். ஆலயத்தின் அருகிலிருந்த பலகையில் "காந்தி ஜெயந்தி சிறப்பு வழிபாடு மற்றும் சொற்பொழிவு. பேச்சாளார்: முனைவர். மைக்கேல் கருணாகரன்" என்றிருந்தது. 

                                                          காந்தி ஜெயந்தி என்றதும் மாதத்தின் 2ஆவது நாள் இன்று என்பது பிடிபட்டது அவனுக்கு. வேகமாய் நண்பர்களை எழுப்பினான். பிரகாஷ் "மச்சி இன்னைக்கு லீவு டா. தூங்கு" என்றான். ரத்தன் இன்று தேதி இரண்டு என்பதை நினைவு படுத்த, வேகமாய் எழுந்தான் பிரகாஷ். பாண்டியராஜனை எழுப்ப முயன்று தோற்றனர் இருவரும். வீட்டின் முகப்பில் இருந்த பாட்டில்களையும், சிகரெட்டு பாக்கெட்டுகளையும் அப்புறப் படுத்த துவங்கினர் இருவரும். "மச்சி மணி ஒன்பது. 10.30 மணிக்கு ஓனர் அம்மா வந்திரும். அதுக்குள்ள எல்லாத்தையும் கிளீன் பண்ணனும்" என்று பிரகாஷ் ரத்தனிடம் கூறிக்கொண்டிருக்கையில், படுத்திருந்த பாண்டியராஜன் சட்டென எழுந்து "மச்சி இன்னைக்கு அத்தை வருவாங்களா?" என்றான். மற்ற இருவரும் ஒரு கணம் பாண்டியனை முறைத்துவிட்டு வேலையில் கவனமாயினர். ஆம் பாண்டியன் ஓனர் அம்மாவின் மகளை ஒருதலைக் காதல் செய்துகொண்டிருக்கும் காதல் மன்னன்.

                                                                  ரத்தனும் பிரகாஷும் வீட்டை சுத்தப் படுத்திகொண்டிருக்க, பாண்டியன் மட்டும் பால்கனிக்கு எதிர் திசையில் இருக்கும் ஜன்னல் கதவை திறந்தான். ஜன்னல் கம்பிகளுக்கு இடையே கண்ணாடியை மாட்டி முகம் சரி செய்து கொண்டே "ஆமா மச்சி, இன்னைக்கு எதுக்கு அத்தை வர்றாங்க? ஏதாவது விஷேமா?" என்றான். "உனக்கு தெரியாதா பாண்டி? காலையிலேயே அந்த பொண்ண பார்க்க மாப்ள வீட்ல இருந்து வந்துட்டு போய்ட்டாங்களாம். எல்லாம் ஓகே ஆயிருச்சாம். அதான் சந்தோசத்துல மீதமான பஜ்ஜி, போண்டா கேசரி எல்லாம் இங்க கொண்டு வர்றாங்களாம்." என்றான் பிரகாஷ். முகம் சுளித்த பாண்டி, நிலவரம் அறிந்து அவனும் வீட்டை சுத்தம் செய்தான். நேரம் கழிந்தது.

                                                                     10.30 மணி ஓனர் அம்மாவும் வந்தாகி விட்டது. வாடகையை வாங்கிவிட்டு "தம்பி நியூஸ் பாத்தீங்களா? மோடி நல்ல லீடர். இன்னைக்கு அவரே வந்து தெருவெல்லாம் சுத்தம் செய்தார். அவரைப் பார்த்து நெறைய அமைச்சர்களும், ஜனாதிபதியும் அவரவர் தெருக்களை சுத்தம் செய்தனர்" என்றார். "இல்லம்மா நாங்க இப்போதான் எழுந்தோம்" என்றான் பிரகாஷ். ஓனர்  அம்மா "அப்போ இன்னும் சாப்பிடவில்லையா யாரும்? மதியானம் வீட்டுக்கு வந்து சாப்பிடுங்க" என்றார் அன்போடு. ரத்தன் "இருக்கட்டும். தங்கச்சி கல்யாண சாப்பாடு எப்போன்னு சொல்லுங்க நாங்க வந்து நல்ல சாப்பிடுகிறோம்" என்றான். பாண்டியராஜன் மட்டும் பயம் கலந்த வெட்கத்தோடு கண்ணாடி மாட்டிய ஜன்னல் பக்கம் சென்றான். வெளியே ஒரு இனவாத அரசியல் கட்சியின் கூட்டம்.  "அண்ணல் காந்தியடிகளை கொன்றதே RSS தான். அவர்கள் இன்று ஆட்சியில் இருந்து கொண்டு நடிக்கிறார்கள்....." என்று முழங்கிக் கொண்டிருந்தார் ஒருவர். இதைப் பார்க்க வந்தது போல் அத்தை என்ன சொல்லப் போகிறார் என்பதை மறைந்து இருந்து கேட்டுக் கொண்டே இருந்தான் பாண்டி. "பாத்துகிட்டே இருக்கோம். இன்னும் ஒன்னும் அமையவில்லை. உங்களுக்கு தெரிஞ்சவங்க, நல்ல குடும்பம் யாராவது இருந்தா சொல்லுங்க. மாப்பிள்ளை அமெரிக்காவுல வேலை செய்யனும்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் ஓனர் அம்மா. ரத்தனும் பிரகாஷும் பாண்டியை நக்கலாய் பார்த்தனர். பிரகாஷ் பாண்டியிடம் "மச்சி அமெரிக்கா மாப்பிள்ளை தான் வேணுமாம். கேட்டியா?" என்றான். பாண்டி "Machi Mr.Gandhi was shot by... what was his name..... Ghodse... No? He was an RSS guy? I don't think so machi. These guys are funny da. By the way, you guys know? My boss always wanted me to work from there machi". ரத்தன் நக்கலாய் "Where da?" பாண்டி "Houston, Texas, America. machi" என்றான். ரத்தனும் பிரகாஷும் அவனை ஒரு வழி செய்ய பாண்டி கோபமடைந்து நேராக படுக்கையறை சென்று தாழிட்டான். பயந்துபோன இவர்கள் கதவை தட்டினர். இரண்டு நிமிடங்கள் கழித்து வெளியே வந்த பாண்டி, நேற்றைய செய்தித்தாளை கீழே விரித்து அமர்ந்தான். "ரோஷக்காரா., என்னடா பண்ணப் போற" என்று பிரகாஷ் முடிப்பதற்குள் பாண்டி தனது கைலிக்குள் ஒழித்து வைத்திருந்த bols 750 ml பாட்டிலை வெளியே எடுத்தான். மற்ற இருவரும் வந்து ஒட்டிக்கொண்டனர். 

                                                           நிமிடங்கள் ஓடின, பாட்டிலில் இருந்த மதுவும் மிதமான வேகத்தில் காலியாகிக் கொண்டே இருந்தது. டிவியில் எந்த நியூஸ் பார்த்தாலும் ஒரே மோடி மற்றும் "Clean India" கதைதான். மோடியை நினைத்து பெருமிதப் பட்டார்கள். இவர்களது இன்றைய பொழுது குடியும் கதையுமாய். நடுவிலயே ரத்தன் தனது செல்போனில் பேஸ்புக்கை திறந்தான். அதிலும் அதே கதைகள். பிரகாஷ், டெண்டுல்கரின் மிகப்பெரிய விசிறி. ரத்தனுக்கோ பெரிய அளவில் பிசினஸ் செய்ய வேண்டும் என்பது வாழ்நாள் லட்சியம். எனவே மிகப் பெரும் பணக்காரர்கள் யாவரும்  இவனின் முன் மாதிரிகள். பாண்டியனுக்கோ சினிமா மீது அவ்வளவு மோகம். வாழ்நாளில் ஒரு சினிமாவையாவது இயக்கிவிட வேண்டும் என்பது ஆசை. கனவு. கமல் வெறியனும் கூட. இவர்களின் ஆதர்ஷ புருஷர்களின் பெயர்களை மோடியின் "Clean India" பரிந்துரைப் பட்டியலில் பார்த்ததும், இவர்களுக்கு பெரும் சந்தோசம், அளப்பரிய  ஆனந்தம். மட்டற்ற மகிழ்ச்சி. இன்னும் நிறைய குடித்தனர். நாட்கள் கடந்தது. டெண்டுல்கரும் அம்பானியும் தெருவில் சுத்தம் செய்யும் புகைப்படங்களும் வீடியோக்களும் வலைத்தளங்களில் உலவ ஆரம்பித்தன. கமல் ஹாசனும் டிவியில் தோன்றி "எனது இந்த பிறந்தநாளுக்கு குப்பை வெட்டுவோம்" என சூளுரைத்தார். மற்ற நடிகர்களும் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை தெருக்களில் இறங்கி சுத்தம் செய்து நிரூபித்தனர். போதாக்குறைக்கு இவர்களின் நண்பர்களும் தாங்கள் தெருவில் சுத்தம் செய்வது போன்ற புகைப்படங்களை வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இவர்களுக்கோ நாம் எதுவுமே செய்யவில்லையே என ஒரு குற்ற உணர்வு. நாட்கள் கடந்தது.                                                          

                                                               ஒரு சனிக்கிழமை இரவு 10 மணி, சபை அமைக்கப்பட்டது. பாட்டில்கள் அடுக்கப்பட்டது. முறுக்கும் சீடைகளும் தட்டுக்களில். குடிக்க ஆரம்பித்தவர்கள், ஒரு தீர்மானம் போட்டு குடித்தார்கள். "மச்சி நாளைக்கு காலையிலே நாம இந்த தெருவில குப்பை அல்ல வர்றவங்களுக்கு ஹெல்ப் பண்றோம்" என்றான் பிரகாஷ். "Cheers மச்சி" என்றார்கள் மற்ற இருவரும். அதிகாலை 4 மணி. எடுத்த தீர்மானத்தின் படியே தெருவை சுத்தம் செய்தனர். அவ்வப்பொழுது செல்போனில் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

                                                                     4.45 மணி. குப்பை வண்டி வந்தது. குப்பை எடுப்பவருக்கு உதவினர். ரத்தன் பேச்சுவாக்கில் "அண்ணா உங்க பெயர் என்ன" என்றான். "குப்பன்" என்றார் அவர். அவரிடம் போதையில் பாண்டி ஏதோ கேட்டான் "எவ்ளோ வருஷமா வேலை செய்யுறீங்க?". அவர் "corporationல 25 வருஷம் தம்பி. அடுத்த மாசம் 23ஆம் தேதி வந்திச்சுன்னா 26 வருஷம். அதுக்கு முன்னாடியும் 13 ல இருந்து 15 வருஷமா இதே வேலை தான், அது தனியார் சம்பளம்., இப்போ கவர்மெண்ட் சம்பளம். எங்க அப்பாவுக்கு எவ்வளவோ முயற்சி பண்ணியும் இந்த கவர்மெண்ட் வேலை கிடைக்கலை. அவரு தனியாருக்கே குப்பை அள்ளியும் பாத்ரூம் கழுவியும் காலத்த ஓட்டுனாரு. எனக்கும் சின்ன வயசுல இருந்தே இந்த தொழில் தான். கடவுள் புண்ணியத்துல இப்போ corporationல வேலை" என்றவரிடம் பிரகாஷ் "அண்ணே டீ சாபிடுவோமா?" என்றான். "இல்லை தம்பி, நீங்க குடிங்க. அடுத்து அடுத்து தெரு இருக்கு நான் போறேன்" என்றார். "அண்ணா எங்களுடன் ஒரு போட்டோ எடுத்துப்பீங்களா?" என்றனர். அவரும் கூச்சத்துடன் போஸ் கொடுத்தார். பின்னர் குப்பை வாகனத்தின் பின்புறம் இருக்கும் ஒரு பலகையில் கால் அமர்த்தி "ஹ்ஹ்ம்ம்ம் போட்டும்" என்றார். வண்டியும் புகை கக்கி நகர்ந்தது.
வீட்டுக்கு வந்ததும் அவரவர் வலைதள பக்கங்களில் "Clean India - Cleaning the street with Kuppan anna" என்ற தலைப்பில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தனர். நாட்கள் வேகமாய் ஓடின. 

                                                            ஒரு நன்னாள். ஆங்கில டிவி நியூஸ் சேனல் ஒன்றில். "What Mr.Modi and his first nine nominees have done to India is phenomenal" என்று ஒரே புகழாரம். இந்தியாவின் அனைத்து நகரங்களையும் பிரதான சாலைகளையும் காட்டுகிறார்கள். அனைத்தும் மிளிர்கிறது. சாலையோரங்கள்  அனைத்தும் அழகாக காட்சியளிக்கிறது. நாடே சுத்தம் மயம். பின்னர் விருது வழங்கும் விழாவும் காட்டப்படுகிறது. பெரிய அரங்கம். ஆயிரக்கணக்கில் சுத்தம் செய்யும் தொழிலாளிகள். பிரம்மாண்ட மேடையை  மலர்களும், வண்ண விளக்குகளும் அலங்கரித்திருக்கின்றன. மேடையில் மோடியும், டெண்டுல்கரும், கமலும், அம்பானியும், இன்னும் சில நட்சத்திரங்களும் சுத்தம் செய்யும் தொழிலாளிகளுக்கு விருதுகள் வழங்குகிறார்கள். குப்பனின் பெயர் அழைக்கப்படுகிறது. மேடையேறுகிறார். அனைவருடனும் நடுக்கத்துடனும் பெருமிதத்துடனும் கை குலுக்குகிறார் குப்பன். மோடியிடம் கை குலுக்கி விட்டு விருதை பார்க்கும் அவர் கண்களில் சில துளிகள். தன் வாழ் நாளின் மிக உன்னதமான தருணம் இது என்று பெருமைப் படுகிறார். விருதை வாங்குவதற்கு முன்பாக, அருகிலிருந்த மைக்கைப் பிடிக்கிறார். "தோழர்களே, இதை விட நமக்கு வேறு என்ன பெருமை இருக்க முடியும்?! இன்றிலிருந்து நாம் இதை விட பன் மடங்கு உழைக்க வேண்டும்" என்று சொல்லி, நடுக்கத்திலிருக்கும் தனது கைகளால் கண்களை துடைத்து விட்டு மோடி பக்கம் திரும்புகிறார். மோடி  2 நொடிகள் அவரை தழுவிக் கொள்கிறார். இன்னும் நடுங்கிக்கொண்டே இருக்கும் கைகளால் விருதைப் பெற முயல, நடுக்கத்தில் தவற விடுகிறார் விருதை. "க்கீன்னென்ற " விழும் சத்தம் மட்டும் மைதானம் முழுவதும்.,
      
                                                   துள்ளி எழுந்தான் பிரகாஷ். அவன் கையருகே இருந்த பாட்டில் இவன் தூக்கத்தில் அசைந்ததில் கீழே விழுந்து "க்கீன்னென்ற" சத்தத்துடன் சுத்திக்கொண்டிருந்தது. சற்று மிதப்பில் இருந்தவன் மணியை பார்த்தான். 4.30. ஒரே தலை வலி. டீ  குடிக்க தெருமுனையில் இருக்கும் கடைக்குச் சென்றான். 4.45. குப்பை வண்டி வந்தது. அதே குப்பன் வந்தார். அதே அளவு குப்பைகளை அள்ளினார். வண்டி சென்றது. 5 மணி. "தினமலர்" ஒன்றும் "The Hindu" ஒன்றும் வாங்கினான். The Hindu பிசினஸ் பக்கத்தில் "Our stocks and market shares will go high this week, says Mr.Anil Ambani" என்றும், அரசியல் பக்கத்தில் "Will the Little Master Sachin Tendulkar attend the session starting this december as a nominated celebrity member of the upper house of our parliament or continue dishonoring our parliament? He has attended only 3 days of his last 2 years as a Rajya sabha MP" என்ற விவாத கட்டுரையும் இருந்தது. தமிழ் செய்தித் தாளில், சினிமா பக்கத்தில்., "விஸ்வரூபம் 2, பாபநாசம், உத்தமவில்லன் மூன்று படங்கள் கையிருப்பு. எது முதலில் வெளிவரும். - கமல் சொல்கிறார்." என்ற செய்தியும் படித்தான்.  தற்செயலாக தேதியைப் பார்த்தான். நவம்பர் 23. குப்பன் தனது தொழிலில் 27ஆவது ஆண்டில் நுழைகிறார். 
                                                   

                                                                                            -பிரகாஷ் போத்திராசு.