2013年3月4日星期一

பல கிறுக்கல்களில் சில - 10 மூதாட்டியும் முத்தமும்

                                                         மூதாட்டியும் முத்தமும் 

                                                 
                                                          பூக்களையும் இலைகளையும் உதிர்த்துவிட்டு வெண்பனியைச் சுமந்து நிற்கும் மரங்கள் சாலையின் இருபுறங்களையும் அலங்கரித்திருந்தன. பேருந்தினுள் கைக்கோர்த்தும் , உதடுகளை உரசியும் பயணித்துக் கொண்டிருக்கும் காதலர்கள்.  பொம்மை மாதிரியான கைக்குழந்தையைக் கொஞ்சிகொண்டிருக்கும் தாய். மற்றவர்களைப் பொருட்படுத்தாமல் சிரித்துக்கொண்டும் விளையாடிக்கொண்டும் பயணிக்கும் பள்ளிச் சிறுவர்கள். இறங்கும் முன்பு கைப்பையினுள் இருக்கும் கண்ணாடியை எடுத்து முகத்தை சரி செய்துகொள்ளும் அழகுப்பதுமைகள். யாரையும் பார்த்து எளிதில் சிரித்துவிடும் மத குருமார்கள், இவர்களுடன் ஒரு மூதாட்டி அவர் மகன்  மகனின் மனைவி, பேத்தி ஆகியோருடன் பயணித்துக் கொண்டிருந்தார். அழகுச்சிறுமி என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவளைப் பார்த்துச் சிரித்தேன். வேகமாய் வெட்கப்பட்டு முகத்தைத் திருப்பியவள் தன் பாட்டியிடம் நான் சிரித்ததைச் சொன்னாள். இம்முறை மூதாட்டி என்னைப் பார்த்துச் சிரித்தாள். இதைப் பார்த்த சிறுமி தன் பாட்டியிடம் "அவரை உனக்குத் தெரியுமா? அவர் ஏன் கருப்பா இருக்கார்? நம்ம ஏன் வெள்ளையா இருக்கோம்? அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்யாசம்?" என்றவாறு விடாது வினவிக்கொண்டே வந்தாள். தர்மச்சங்கடமடைந்த மூதாட்டி "அவர் வேற ஊர்ல இருந்து வந்திருக்காரு அவங்க ஊர்ல எல்லாரும் அப்படித்தான் இருப்பாங்க" என்றாள். எனினும் சரியான பதில் கிடைக்காததால், அவளும் விடுவதாய் இல்லை. இம்முறை மூதாட்டி வருந்துவதாய்ச் செய்கை செய்து முறுவல் பூத்தார். "பரவாயில்லை" என நானும் செய்கை செய்தேன். சிறுமியிடம் கொஞ்சமும் எரிச்சலடையாத மூதாட்டி "பூனையில் எப்படி கருப்பு பூனை, வெள்ளை பூனை, மஞ்சள் பூனைனு நிறைய வகை உண்டோ அதே மாதிரிதான் மனிதர்களும். நிறம் மாறினாலும் அவங்களுக்கும் நமக்கும் எந்த வித்யாசமும் இல்லை" என்றாள். சமாதானம் அடைந்த சிறுமியிடம் மூதாட்டி தான் கையில் கொண்டிருந்த பூச்செண்டிலிருந்து ஒரு பூவை மட்டும் எடுத்து என்னிடம் கொடுக்கச் சொன்னாள். சிறுமியும் தயக்கமில்லாமல் கொண்டுவந்து கொடுத்தாள்.

                                           அந்நியக் குழந்தையின் பரிசும்,  மழலையின் கேள்விகளும், மூதாட்டியின் அன்பு பதில்களும், சிறுவர்களின் சிரிப்பும் விளையாட்டும், முத்தங்களோடு கூடிய காதல் பரிமாற்றங்களும், பனியின் வெள்ளை அழகும், பதுமைகளின் கொள்ளை அழகும்.....காலை பேருந்துப் பயணம் இதைவிட சிறப்பாக அமைந்துவிடமுடியாது. நான் இறங்கவேண்டிய இடத்தில் மூதாட்டியும் இறங்க ஆயத்தமானாள். வழியை மறைத்து நின்ற நான் அவளுக்கு வழிவிட்டு ஒதுங்கினேன். பாட்டி இறங்கப்போவதை அறிந்த பேத்தி, தன் அப்பாவிடம், "அப்பா, திரும்ப பாட்டி எப்போ வீட்டுக்கு வருவாங்க" என்று கேட்டு முகம் புதைத்து சோகமானாள்.

                                                பேருந்திலிருந்து இறங்கிய மூதாட்டி, ஒரு கையில் பேத்தி கொடுத்த பூச்செண்டும், மறுகையில் இனிப்பு மிட்டாய்களோடும் நின்று கொண்டிருந்தாள். கூனிய முதுகுடனும், குறுகிய தோளுடனும், சுருங்கிய தோலுடனும், தளர்ந்த கால்களுடனும், சாலையைக் கடக்க மிகவும் சிரமப்பட்டாள். வேகமாய் நகரும் இளைய தலைமுறையுடன் நானும் மிக வேகமாய் நகர்ந்தேன். என் கையில் வழக்கமாய் இல்லாத ஏதோ ஒன்று இருப்பது புரிந்தது. மூதாட்டி, சிறுமியிடம் எனக்காக கொடுத்து அனுப்பிய பூ. சட்டென என் கால்கள் நகர மறுத்தன. மிக வேகமாய் முன்னோக்கி நகர்ந்த இளையவர்களிடமிருந்து விலகி பின்னோக்கி நடந்தேன். மூதாட்டிக்கு அருகில் போய் என் கை நீட்டினேன். அதுவரையும் குனிந்தே நடந்து வந்த அவர் நிமிர்ந்து என்னைப் பார்த்து அன்பாய் சிரித்தார். சாலையைக் கடந்த பின் "எங்கே போக வேண்டும் அருகிலானால் நானும் வருகிறேன்" என்றேன். பிடிக்கப்பட்ட என் கை இன்னும் விடப்படவில்லை. "அருகில் தான்" என்றாள். அவளுடனேயே நடந்தேன். அதன் பின் என்னுடன் எதுவும் பேசவில்லை. கை பிடி மட்டும் இறுகியது.

                                               300 அடி தாண்டியிருப்போம். ஒரு கட்டிட வளாகம், மிகவும் அமைதியான, இறுக்கமடைந்த இடமாகத் தெரிந்தது. அங்கு இருந்த அனைவரும் இம்மூதாட்டியைப் போலவே, தளர்ந்த உடலும், முறிந்த மனமும் கொண்டவர்களாய்த் தெரிந்தார்கள். அந்த நிமிடம்தான் என் மனதுக்கு அந்த மூதாட்டி என் கையைப் பிடித்த விதம் பிடிபட்டது. ஆம், அது முதியோர் இல்லமே. சற்றே இறுக்கத்துடன் இருந்த என்னைப் பார்த்து சிரித்தாள். பின் தன் பேத்தி கொடுத்த மிட்டாயில் ஒன்றை என் கையில் திணித்தாள். என்னிடமோ அவள் கொடுத்த பூ மட்டுமே இருந்தது. அவளிடம் அதைக் கொடுத்தேன்.. சிரித்த அவள், என் முகம் தொட்டு, முத்தமிட்டு ஆசீர்வதித்தாள். சுருக்கங்கள் அவள் தோலில் மட்டுமே. கனத்த மனதுடன் அங்கிருந்து வெளியேறினேன். மிக வேகமாக ஐரோப்பிய கலாச்சாரத்துக்கு மாறி வரும் நாம், முதியோர் இல்ல கலாச்சாரத்தையும் இங்கிருந்துதான் கற்றுக்கொண்டிருப்போமோ? மிக அழகாகத் தெரிந்த ஐரோப்பியர்களைக் கண்டு அருவருக்கிறேன் இப்பொழுது. 

2 条评论: