ஊனமற்ற அன்பு
"முஹம்மது பாய்..., கறி ரெடியா??
"இந்தா!! ரெண்டு நிமிஷம்..."
"அட சீக்கிரம் கொண்டு வாங்க பாய், வெங்காயம், தக்காளி அடிப் புடிக்குது".
"என்னப்பா,,!! ஏமாந்தவங்கதானேனு மொக்க மொக்கையான கறியெல்லாம் இங்க கொண்டு வந்திருக்கியா? எங்க பாப்போம்?"
மாஸ்டர் பாத்திரத்தைக் கிண்ட, கறிக்கடை பாய், கொண்டு வந்த கறித்துண்டுகளைக் கழுவ, முதியவர் ஒருவர் அருகிலிருந்தவாறே சமையல் தரத்தை ஆய்வு செய்துகொண்டிருக்க, சந்திரன், தான் கொண்டு வந்த இனிப்புகளை அங்கு இருந்த குழந்தைகளுக்குக் கொடுக்கத் தொடங்கினான். இனிப்புகளை வாங்கிய குழந்தைகளின் முகத்திலிருந்த சந்தோசத்தைப் பார்த்து, தானும் மகிழ்ந்தான். பின்னர் குழந்தைகளோடு சேர்ந்து அவர்கள் தங்குமிடம், வகுப்பறைகள், உணவருந்துமிடம் என அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான். "பாய், தலையணை, செருப்பு" என குழந்தைகளிடம் என்னவெல்லாம் இல்லை என எழுதி வைத்துக்கொண்டான். அடுத்த முறை வரும்பொழுது வாங்குவதற்காக.
---------------------- 30 நிமிடம் கழிந்தது. -----------------------
"யோவ் கறி வெந்திருச்சு..., அரிசி எங்கய்யா??" மாஸ்டர் கத்த எடுபிடி வேகமாய் சந்திரனிடம் "சார், அரிசி........." என்று இழுத்தான். "சாரி, அரிசி மூட்டைய கார் டிக்கிலயே வச்சிட்டேன். இந்தாங்க சாவி, எடுத்துக்கோங்க. அப்பிடியே அதுல இருக்கும் கிரிக்கெட் பேட், பந்து எல்லாத்தையும் எடுத்திருங்க.. ஓகே?" எனச் சொல்லி, கார் சாவியை எடுபிடியிடம் கொடுத்தனுப்பினான். காருக்குச் சென்ற எடுபிடியை சில சிறுவர்கள் தொடர்ந்தனர். காருக்குள் வேறு என்னென்ன இருக்கிறது என்பதை அறிய ஒரு கூட்டம், காருக்கு உள்ளே எப்படி இருக்கிறது என்பதை பார்க்க ஒரு கூட்டம்.
கிரிக்கெட் மட்டையும் பந்துகளையும் பார்த்தவுடன் அனைவருக்கும் குஷி.!! ஒருவன் மட்டும் "விளையாடலாமா?" என்றான். சந்திரன் "விளையாடலாம், ஆனா வெயில் அடிக்குதே!" என்றாற்போல் வானத்தை நோக்கினான். "பரவாயில்ல, இன்னைக்கு ஒரு நாள் விளையாடுங்க" என்று சந்திரனை இழுத்துச் சென்றான் அச்சிறுவன். குழந்தைகளுடன் சேர்ந்து சிரித்து விளையாடி அவன் களிப்புற்றிருந்தாலும் சிறிது களைப்பாற வேண்டியிருந்தது. களைப்பாறினான்.
-------------------1 மணி நேரம் கழிந்தது. -------------------
களைப்பாறிய சந்திரனிடம் "சாப்பிடலாமா?" என்றார் பள்ளி மேலாளர். "ஓ.., போலாமே" என்றான். "போறியா என்ன வேணும்"......... என ஆடுகளத்தில் இருந்து பிள்ளைகளை விரட்டத் துவங்கினார்.
உணவருந்துமிடம்....... குழந்தைகள் அனைவரும் வரிசையில் வந்து அமர்ந்தனர். சந்திரனும் அவர்களுடன் அமர்ந்தான். அனைவருக்கும் அலுமினியத் தட்டு தரப்பட்டது. இவனுக்கு மட்டும் வாழை இழை.
"எல்லாரும் தட்டுல சாப்பிடுறாங்க எனக்கும் அந்த மாதிரி ஒரு தட்டுலயே சாப்பாடு போடுங்க" என்றவனிடம் "இல்ல சார், பிள்ளைங்களுக்கு இழைல சாப்பிடத் தெரியாது., அதுவுமில்லாம நீங்க இந்த தட்டுல சாப்பிடக் கூடாது. பரவாயில்ல சார் பிள்ளைங்களுக்கு இதெல்லாம் பழகிடுச்சு., நீங்க இழைலயே சாப்பிடுங்க" என்றார் மேலாளர். அவன் எழுதி வைத்திருந்ததில் "புது தட்டுக்கள்" என்பதையும் சேர்த்துவிட்டு பின்னர் சாப்பிட்டான். சாப்பிட்ட பின் குழந்தைகள் அனைவருக்கும் பள்ளியின் முகப்பில் வைத்து மிட்டாய்களை வழங்கினான். மிட்டாய்களை வாங்கிய குழந்தைகள் சந்தோசமாக மாலை வகுப்புக்குச் சென்றமர்ந்தனர். சந்திரனும் புறப்பட ஆயத்தமானான்.
மிகச்சரியாக அந்நேரம், ஒரு கணவன் மனைவி தங்கள் குழந்தையுடன் அங்கு வந்தனர். "சார், இது சரிப்பட்டு வராது., எல்லாம் சரி ஆயிரும்னு சொல்லித்தான் அனுப்பி வச்சீங்க.., ரெண்டு மாசம் ஆயிருச்சு, இது இன்னும் பேச மாட்டேங்குது, கூப்டா கேக்கவும் மாட்டேங்குது. இனிமே எங்களால இத வீட்ல வச்சி சமாளிக்க முடியாது. நீங்களே வச்சுக்கோங்க." எனச் சொல்லி குழந்தையை அங்கே விட்டுச் சென்றனர். அழுது கொண்டே இருந்த குழந்தையைப் பார்த்ததும் சந்திரனுக்கு அங்கிருந்து போக மனம் ஒப்புக்கொள்ளவில்லை.
ஐந்தே வயது சிறுமி அவள். சாக்லேட் கொடுத்தான் அவள் வாங்கவில்லை. பந்துகளைக் கொடுத்தான் அதையும் வாங்காமல் அழுது கொண்டே இருந்தாள். எல்லாவற்றையும் அவளிடமிருந்து தள்ளிவைத்து விட்டு, அவளருகில் சென்று, தலை மேல் கை வைத்து "அழாத டா கண்ணா, அழக்கூடாது" என அவள் கண்ணீர் துடைத்து கை நீட்டினான். அவன் முழுவதுமாய்த் தன் கைகளை நீட்டுவதற்கு முன்பாகாவே, சிறுமி அவன் மேல் சாய்ந்து கொண்டாள். அழுது கொண்டே சாய்ந்தவள், உறங்கும் வரை அவனைவிட்டுப் பிரியவில்லை. விரித்திருந்த பாயில் அவளை கிடத்திவிட்டு கிளம்பினான்.
"சார் போறதுக்கு முன்னால இந்த புத்தகத்துல கையெழுத்து போட்ருங்க, ப்ளீஸ்" என மேலாளர் வழிமறித்தார். புத்தகத்தை வாங்கிப் பார்த்த சந்திரனுக்கு ஆச்சர்யம். "பரவாயில்லையே இத்தன பேர் நல்லது செய்யுறாங்களே!!" என்றான். சலித்துக்கொண்ட மேலாளர், "என்ன இருந்து என்ன சார் பிரயோஜனம், இதுங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கலையே. 1 லட்சம் பேர் இருக்குற ஊர்ல 100 குழந்தைங்க இந்த மாதிரி இருக்குதுங்க. அதே ஊர்ல 200 பேர் நல்லா சம்பாதிக்கிறவங்களும் இருப்பாங்க. அந்த 200 பேர்ல 100 பேர் ஒவ்வொருத்தரா 3 மாசத்துக்கு ஒரு நாள் வந்து இவங்களுக்கு சாப்பாடு போட்டாலே இங்க தினமும் விருந்துதான். மொத்தமா காசு கொடுத்துட்டு போறவங்களும் உண்டு. அடுப்பு எரியிறதுக்கெல்லாம் இங்க வழி இருக்கு. ஆனா அடுப்ப மட்டுமே எரிய வச்சு இவங்க வயித்தெரிச்சல அணைக்க முடியாது சார். 5 வயசு குழந்தை அவ, மிட்டாய் கொடுத்தீங்க, பந்து கொடுத்தீங்க, அதுக்கெல்லாம் அடங்காதவ, அவளோட தலைய தொட்டு, தடவி, கண்ணீர் தொடைச்சி விட்டவுடனே எப்பிடி வந்து ஒட்டிக்கிட்டா பாத்தீங்களா? அதுதான் இவங்களுக்கு தேவை. நான் பேசி என்ன சார் ஆகப்போகுது. நீங்க கிளம்புங்க." என புத்தகத்தை வாங்கிக்கொண்டு வழியனுப்பி வைத்தார்.
வண்டியினுள் அமர்ந்தவன், தன சட்டைப் பையில் இருந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தான். அதில் "1.சாப்பாடு, 2.மிட்டாய்கள், 3.பாய், 4.தலையணை, 5.செருப்பு, 6.புது தட்டுக்கள்" என்ற வரிசையில் குழந்தைகளுக்குத் தேவையானவை எழுதப் பட்டிருந்தன. தன் பேனாவை எடுத்து மற்றுமொன்றை உள்ளே புகுத்தி, வரிசையை மாற்றி எழுதினான். அவ்வரிசை
"1.அன்பு, 2.பாசம், 3.சாப்பாடு, 4.மிட்டாய்கள், 5.பாய், 6.தலையணை, 7.செருப்பு, 8.புது தட்டுக்கள்." அடுத்த முறை வரும்பொழுது, வாரி இறைக்கும் இறைவனாய் இல்லாமல், கட்டித் தழுவும் மனிதனாய் வர முடிவெடுத்தான்.
没有评论:
发表评论