2014年11月23日星期日

பல கிறுக்கல்களில் சில - 15 "Clean India - Cleaning the street with Kuppan anna"

"Clean India - Cleaning the street with Kuppan anna"





ஜக்கிரியா காலனி, 2ஆம் தெரு, கோடம்பாக்கம், சென்னை. அக்டோபர் 2, 2014.

                                                                 
                                                                  ஜன்னல்களின் இடுக்குகளை பிளந்து கொண்டு உள்ளே நுழையும் சூரிய கதிர்கள், பிரகாஷின் முகத்தை பதம் பார்க்க, அருகில் உறங்கிக் கொண்டிருந்த தனது நண்பர்களிடத்து இருந்த போர்வையை உருவி முகம் மறைத்து மீண்டும் படுத்தான். போர்வை உருவப் பட்டதில் தூக்கம் கலைந்தது பாண்டியராஜனுக்கு. தலையணையில் மீண்டும் முகம் புதைத்து படுத்தான் அவனும். அவர்கள் வீட்டுக்கு எதிரே இருக்கும் கிறித்தவ வழிபாட்டு ஆலய ஒலிபெருக்கியில் இருந்து "...... அவரின் செயல்களும் வாழ்வும் கர்த்தருக்கு ஒத்தது. விஷ்ணுவுக்கு எப்படி பல அவதாரங்களோ அது போல நமது கர்த்தரின் மறு அவதாரம் காந்தியடிகள் எனச் சொன்னால் அது மிகையல்ல... அவர்..." என்று ஒருவர் பேசுவது ரத்தன் தேவ் காதுகளை இம்சித்தது. எரிச்சலில் எழுந்த அவன் அறைக்கதவை வேகமாய் திறந்தான். கதவில் இடிபட்டு பாட்டில்கள் உருண்டன. கீழிருந்த காலி சிகரெட்டு பாக்கெட்டுகளையும் கவனிக்காது மிதித்துச் சென்று, பால்கனியில் இருந்து வெளியே எட்டிப் பார்த்தான். ஆலயத்தின் அருகிலிருந்த பலகையில் "காந்தி ஜெயந்தி சிறப்பு வழிபாடு மற்றும் சொற்பொழிவு. பேச்சாளார்: முனைவர். மைக்கேல் கருணாகரன்" என்றிருந்தது. 

                                                          காந்தி ஜெயந்தி என்றதும் மாதத்தின் 2ஆவது நாள் இன்று என்பது பிடிபட்டது அவனுக்கு. வேகமாய் நண்பர்களை எழுப்பினான். பிரகாஷ் "மச்சி இன்னைக்கு லீவு டா. தூங்கு" என்றான். ரத்தன் இன்று தேதி இரண்டு என்பதை நினைவு படுத்த, வேகமாய் எழுந்தான் பிரகாஷ். பாண்டியராஜனை எழுப்ப முயன்று தோற்றனர் இருவரும். வீட்டின் முகப்பில் இருந்த பாட்டில்களையும், சிகரெட்டு பாக்கெட்டுகளையும் அப்புறப் படுத்த துவங்கினர் இருவரும். "மச்சி மணி ஒன்பது. 10.30 மணிக்கு ஓனர் அம்மா வந்திரும். அதுக்குள்ள எல்லாத்தையும் கிளீன் பண்ணனும்" என்று பிரகாஷ் ரத்தனிடம் கூறிக்கொண்டிருக்கையில், படுத்திருந்த பாண்டியராஜன் சட்டென எழுந்து "மச்சி இன்னைக்கு அத்தை வருவாங்களா?" என்றான். மற்ற இருவரும் ஒரு கணம் பாண்டியனை முறைத்துவிட்டு வேலையில் கவனமாயினர். ஆம் பாண்டியன் ஓனர் அம்மாவின் மகளை ஒருதலைக் காதல் செய்துகொண்டிருக்கும் காதல் மன்னன்.

                                                                  ரத்தனும் பிரகாஷும் வீட்டை சுத்தப் படுத்திகொண்டிருக்க, பாண்டியன் மட்டும் பால்கனிக்கு எதிர் திசையில் இருக்கும் ஜன்னல் கதவை திறந்தான். ஜன்னல் கம்பிகளுக்கு இடையே கண்ணாடியை மாட்டி முகம் சரி செய்து கொண்டே "ஆமா மச்சி, இன்னைக்கு எதுக்கு அத்தை வர்றாங்க? ஏதாவது விஷேமா?" என்றான். "உனக்கு தெரியாதா பாண்டி? காலையிலேயே அந்த பொண்ண பார்க்க மாப்ள வீட்ல இருந்து வந்துட்டு போய்ட்டாங்களாம். எல்லாம் ஓகே ஆயிருச்சாம். அதான் சந்தோசத்துல மீதமான பஜ்ஜி, போண்டா கேசரி எல்லாம் இங்க கொண்டு வர்றாங்களாம்." என்றான் பிரகாஷ். முகம் சுளித்த பாண்டி, நிலவரம் அறிந்து அவனும் வீட்டை சுத்தம் செய்தான். நேரம் கழிந்தது.

                                                                     10.30 மணி ஓனர் அம்மாவும் வந்தாகி விட்டது. வாடகையை வாங்கிவிட்டு "தம்பி நியூஸ் பாத்தீங்களா? மோடி நல்ல லீடர். இன்னைக்கு அவரே வந்து தெருவெல்லாம் சுத்தம் செய்தார். அவரைப் பார்த்து நெறைய அமைச்சர்களும், ஜனாதிபதியும் அவரவர் தெருக்களை சுத்தம் செய்தனர்" என்றார். "இல்லம்மா நாங்க இப்போதான் எழுந்தோம்" என்றான் பிரகாஷ். ஓனர்  அம்மா "அப்போ இன்னும் சாப்பிடவில்லையா யாரும்? மதியானம் வீட்டுக்கு வந்து சாப்பிடுங்க" என்றார் அன்போடு. ரத்தன் "இருக்கட்டும். தங்கச்சி கல்யாண சாப்பாடு எப்போன்னு சொல்லுங்க நாங்க வந்து நல்ல சாப்பிடுகிறோம்" என்றான். பாண்டியராஜன் மட்டும் பயம் கலந்த வெட்கத்தோடு கண்ணாடி மாட்டிய ஜன்னல் பக்கம் சென்றான். வெளியே ஒரு இனவாத அரசியல் கட்சியின் கூட்டம்.  "அண்ணல் காந்தியடிகளை கொன்றதே RSS தான். அவர்கள் இன்று ஆட்சியில் இருந்து கொண்டு நடிக்கிறார்கள்....." என்று முழங்கிக் கொண்டிருந்தார் ஒருவர். இதைப் பார்க்க வந்தது போல் அத்தை என்ன சொல்லப் போகிறார் என்பதை மறைந்து இருந்து கேட்டுக் கொண்டே இருந்தான் பாண்டி. "பாத்துகிட்டே இருக்கோம். இன்னும் ஒன்னும் அமையவில்லை. உங்களுக்கு தெரிஞ்சவங்க, நல்ல குடும்பம் யாராவது இருந்தா சொல்லுங்க. மாப்பிள்ளை அமெரிக்காவுல வேலை செய்யனும்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் ஓனர் அம்மா. ரத்தனும் பிரகாஷும் பாண்டியை நக்கலாய் பார்த்தனர். பிரகாஷ் பாண்டியிடம் "மச்சி அமெரிக்கா மாப்பிள்ளை தான் வேணுமாம். கேட்டியா?" என்றான். பாண்டி "Machi Mr.Gandhi was shot by... what was his name..... Ghodse... No? He was an RSS guy? I don't think so machi. These guys are funny da. By the way, you guys know? My boss always wanted me to work from there machi". ரத்தன் நக்கலாய் "Where da?" பாண்டி "Houston, Texas, America. machi" என்றான். ரத்தனும் பிரகாஷும் அவனை ஒரு வழி செய்ய பாண்டி கோபமடைந்து நேராக படுக்கையறை சென்று தாழிட்டான். பயந்துபோன இவர்கள் கதவை தட்டினர். இரண்டு நிமிடங்கள் கழித்து வெளியே வந்த பாண்டி, நேற்றைய செய்தித்தாளை கீழே விரித்து அமர்ந்தான். "ரோஷக்காரா., என்னடா பண்ணப் போற" என்று பிரகாஷ் முடிப்பதற்குள் பாண்டி தனது கைலிக்குள் ஒழித்து வைத்திருந்த bols 750 ml பாட்டிலை வெளியே எடுத்தான். மற்ற இருவரும் வந்து ஒட்டிக்கொண்டனர். 

                                                           நிமிடங்கள் ஓடின, பாட்டிலில் இருந்த மதுவும் மிதமான வேகத்தில் காலியாகிக் கொண்டே இருந்தது. டிவியில் எந்த நியூஸ் பார்த்தாலும் ஒரே மோடி மற்றும் "Clean India" கதைதான். மோடியை நினைத்து பெருமிதப் பட்டார்கள். இவர்களது இன்றைய பொழுது குடியும் கதையுமாய். நடுவிலயே ரத்தன் தனது செல்போனில் பேஸ்புக்கை திறந்தான். அதிலும் அதே கதைகள். பிரகாஷ், டெண்டுல்கரின் மிகப்பெரிய விசிறி. ரத்தனுக்கோ பெரிய அளவில் பிசினஸ் செய்ய வேண்டும் என்பது வாழ்நாள் லட்சியம். எனவே மிகப் பெரும் பணக்காரர்கள் யாவரும்  இவனின் முன் மாதிரிகள். பாண்டியனுக்கோ சினிமா மீது அவ்வளவு மோகம். வாழ்நாளில் ஒரு சினிமாவையாவது இயக்கிவிட வேண்டும் என்பது ஆசை. கனவு. கமல் வெறியனும் கூட. இவர்களின் ஆதர்ஷ புருஷர்களின் பெயர்களை மோடியின் "Clean India" பரிந்துரைப் பட்டியலில் பார்த்ததும், இவர்களுக்கு பெரும் சந்தோசம், அளப்பரிய  ஆனந்தம். மட்டற்ற மகிழ்ச்சி. இன்னும் நிறைய குடித்தனர். நாட்கள் கடந்தது. டெண்டுல்கரும் அம்பானியும் தெருவில் சுத்தம் செய்யும் புகைப்படங்களும் வீடியோக்களும் வலைத்தளங்களில் உலவ ஆரம்பித்தன. கமல் ஹாசனும் டிவியில் தோன்றி "எனது இந்த பிறந்தநாளுக்கு குப்பை வெட்டுவோம்" என சூளுரைத்தார். மற்ற நடிகர்களும் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை தெருக்களில் இறங்கி சுத்தம் செய்து நிரூபித்தனர். போதாக்குறைக்கு இவர்களின் நண்பர்களும் தாங்கள் தெருவில் சுத்தம் செய்வது போன்ற புகைப்படங்களை வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இவர்களுக்கோ நாம் எதுவுமே செய்யவில்லையே என ஒரு குற்ற உணர்வு. நாட்கள் கடந்தது.                                                          

                                                               ஒரு சனிக்கிழமை இரவு 10 மணி, சபை அமைக்கப்பட்டது. பாட்டில்கள் அடுக்கப்பட்டது. முறுக்கும் சீடைகளும் தட்டுக்களில். குடிக்க ஆரம்பித்தவர்கள், ஒரு தீர்மானம் போட்டு குடித்தார்கள். "மச்சி நாளைக்கு காலையிலே நாம இந்த தெருவில குப்பை அல்ல வர்றவங்களுக்கு ஹெல்ப் பண்றோம்" என்றான் பிரகாஷ். "Cheers மச்சி" என்றார்கள் மற்ற இருவரும். அதிகாலை 4 மணி. எடுத்த தீர்மானத்தின் படியே தெருவை சுத்தம் செய்தனர். அவ்வப்பொழுது செல்போனில் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

                                                                     4.45 மணி. குப்பை வண்டி வந்தது. குப்பை எடுப்பவருக்கு உதவினர். ரத்தன் பேச்சுவாக்கில் "அண்ணா உங்க பெயர் என்ன" என்றான். "குப்பன்" என்றார் அவர். அவரிடம் போதையில் பாண்டி ஏதோ கேட்டான் "எவ்ளோ வருஷமா வேலை செய்யுறீங்க?". அவர் "corporationல 25 வருஷம் தம்பி. அடுத்த மாசம் 23ஆம் தேதி வந்திச்சுன்னா 26 வருஷம். அதுக்கு முன்னாடியும் 13 ல இருந்து 15 வருஷமா இதே வேலை தான், அது தனியார் சம்பளம்., இப்போ கவர்மெண்ட் சம்பளம். எங்க அப்பாவுக்கு எவ்வளவோ முயற்சி பண்ணியும் இந்த கவர்மெண்ட் வேலை கிடைக்கலை. அவரு தனியாருக்கே குப்பை அள்ளியும் பாத்ரூம் கழுவியும் காலத்த ஓட்டுனாரு. எனக்கும் சின்ன வயசுல இருந்தே இந்த தொழில் தான். கடவுள் புண்ணியத்துல இப்போ corporationல வேலை" என்றவரிடம் பிரகாஷ் "அண்ணே டீ சாபிடுவோமா?" என்றான். "இல்லை தம்பி, நீங்க குடிங்க. அடுத்து அடுத்து தெரு இருக்கு நான் போறேன்" என்றார். "அண்ணா எங்களுடன் ஒரு போட்டோ எடுத்துப்பீங்களா?" என்றனர். அவரும் கூச்சத்துடன் போஸ் கொடுத்தார். பின்னர் குப்பை வாகனத்தின் பின்புறம் இருக்கும் ஒரு பலகையில் கால் அமர்த்தி "ஹ்ஹ்ம்ம்ம் போட்டும்" என்றார். வண்டியும் புகை கக்கி நகர்ந்தது.
வீட்டுக்கு வந்ததும் அவரவர் வலைதள பக்கங்களில் "Clean India - Cleaning the street with Kuppan anna" என்ற தலைப்பில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தனர். நாட்கள் வேகமாய் ஓடின. 

                                                            ஒரு நன்னாள். ஆங்கில டிவி நியூஸ் சேனல் ஒன்றில். "What Mr.Modi and his first nine nominees have done to India is phenomenal" என்று ஒரே புகழாரம். இந்தியாவின் அனைத்து நகரங்களையும் பிரதான சாலைகளையும் காட்டுகிறார்கள். அனைத்தும் மிளிர்கிறது. சாலையோரங்கள்  அனைத்தும் அழகாக காட்சியளிக்கிறது. நாடே சுத்தம் மயம். பின்னர் விருது வழங்கும் விழாவும் காட்டப்படுகிறது. பெரிய அரங்கம். ஆயிரக்கணக்கில் சுத்தம் செய்யும் தொழிலாளிகள். பிரம்மாண்ட மேடையை  மலர்களும், வண்ண விளக்குகளும் அலங்கரித்திருக்கின்றன. மேடையில் மோடியும், டெண்டுல்கரும், கமலும், அம்பானியும், இன்னும் சில நட்சத்திரங்களும் சுத்தம் செய்யும் தொழிலாளிகளுக்கு விருதுகள் வழங்குகிறார்கள். குப்பனின் பெயர் அழைக்கப்படுகிறது. மேடையேறுகிறார். அனைவருடனும் நடுக்கத்துடனும் பெருமிதத்துடனும் கை குலுக்குகிறார் குப்பன். மோடியிடம் கை குலுக்கி விட்டு விருதை பார்க்கும் அவர் கண்களில் சில துளிகள். தன் வாழ் நாளின் மிக உன்னதமான தருணம் இது என்று பெருமைப் படுகிறார். விருதை வாங்குவதற்கு முன்பாக, அருகிலிருந்த மைக்கைப் பிடிக்கிறார். "தோழர்களே, இதை விட நமக்கு வேறு என்ன பெருமை இருக்க முடியும்?! இன்றிலிருந்து நாம் இதை விட பன் மடங்கு உழைக்க வேண்டும்" என்று சொல்லி, நடுக்கத்திலிருக்கும் தனது கைகளால் கண்களை துடைத்து விட்டு மோடி பக்கம் திரும்புகிறார். மோடி  2 நொடிகள் அவரை தழுவிக் கொள்கிறார். இன்னும் நடுங்கிக்கொண்டே இருக்கும் கைகளால் விருதைப் பெற முயல, நடுக்கத்தில் தவற விடுகிறார் விருதை. "க்கீன்னென்ற " விழும் சத்தம் மட்டும் மைதானம் முழுவதும்.,
      
                                                   துள்ளி எழுந்தான் பிரகாஷ். அவன் கையருகே இருந்த பாட்டில் இவன் தூக்கத்தில் அசைந்ததில் கீழே விழுந்து "க்கீன்னென்ற" சத்தத்துடன் சுத்திக்கொண்டிருந்தது. சற்று மிதப்பில் இருந்தவன் மணியை பார்த்தான். 4.30. ஒரே தலை வலி. டீ  குடிக்க தெருமுனையில் இருக்கும் கடைக்குச் சென்றான். 4.45. குப்பை வண்டி வந்தது. அதே குப்பன் வந்தார். அதே அளவு குப்பைகளை அள்ளினார். வண்டி சென்றது. 5 மணி. "தினமலர்" ஒன்றும் "The Hindu" ஒன்றும் வாங்கினான். The Hindu பிசினஸ் பக்கத்தில் "Our stocks and market shares will go high this week, says Mr.Anil Ambani" என்றும், அரசியல் பக்கத்தில் "Will the Little Master Sachin Tendulkar attend the session starting this december as a nominated celebrity member of the upper house of our parliament or continue dishonoring our parliament? He has attended only 3 days of his last 2 years as a Rajya sabha MP" என்ற விவாத கட்டுரையும் இருந்தது. தமிழ் செய்தித் தாளில், சினிமா பக்கத்தில்., "விஸ்வரூபம் 2, பாபநாசம், உத்தமவில்லன் மூன்று படங்கள் கையிருப்பு. எது முதலில் வெளிவரும். - கமல் சொல்கிறார்." என்ற செய்தியும் படித்தான்.  தற்செயலாக தேதியைப் பார்த்தான். நவம்பர் 23. குப்பன் தனது தொழிலில் 27ஆவது ஆண்டில் நுழைகிறார். 
                                                   

                                                                                            -பிரகாஷ் போத்திராசு.
                                                          

2013年11月9日星期六

பல கிறுக்கல்களில் சில - 14

பாச நீரையும் நேச வேரையும் இழந்துவிட்டின், நிர்கதியும் நிராயுதபாணியுமாக நிற்கும் மூத்த மரமாம் ஒற்றை மரம் வாழ்ந்திடுமோ?

2013年6月20日星期四

பல கிறுக்கல்களில் சில - 13 மனவியலும் அறிவியலும்

                                           மனவியலும் அறிவியலும் 

பள்ளியில் இருந்து திரும்புவதற்கு 6 மணிக்கு மேல் ஆகிவிட்டது முருகனுக்கு. அப்போது முருகன் ஐந்தாம் வகுப்பு மாணவன். படு சுட்டி. வீட்டுக்குள் வந்தவன், வேகமாக தன் புத்தக மூட்டையை ஒரு ஓரத்தில் கிடத்திவிட்டு, சமயலறையில் இருந்த தன் அம்மாவிடம்

 "அம்மா மிஸ் என்னை நகம் வெட்டச் சொல்லி திட்டினாங்க. நகம் வெட்டி விடு" 

 "மொதல்ல நீ சாப்பிடு. நகம் வெட்டுறத காலைல செய்வோம்."

 "இல்ல எனக்கு இப்போவே வெட்டனும்"

 "அடம் பிடிக்காதே. இப்போ வெட்டகூடாது"

 "ஏன்?"

 "ராத்திரியில் நகம் வெட்டக்கூடாது. வீட்டுக்கு ஆகாது." அவனும் ஒப்புக்கொண்டு மறுநாள் காலையில் நகம் வெட்டிவிட்டு பள்ளிக்குச் சென்றான். 

வருடங்கள் ஓடிவிட்டன. முருகனுக்கு திருமணம் முடிந்து 8 வயதில் ஒரு மகள். இனிய தமிழ் பெயர் "கவிதாயினி". ஒருநாள் இரவு கவிதாயினி தன் அப்பாவிடம் 

"அப்பா, I was scolded by my class teacher for not having my nails cut. I need to cut it now.

"No. கவிதாயினி You cannot cut your nails now. May be tomorrow, in the morning"

"அப்பா......!!!!!! But why not now?"

"You should not be cutting them at night"

"அதத்தான் கேக்குறேன். why shouldn't  we be cutting them at night.?"

"கவிதாயினி you should have implicit obedience to certain things in life. You can neither question nor answer them" அவள் ஒன்றும் புரியாமல் சென்றுவிட்டாள்.


முன்னவர்கள் விட்டுச்சென்ற பாரம்பரியமிக்க கூற்றுகளையும் சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் அப்படியே (ஆமாம்  அப்படியே.,!!!! எவ்வளவு படித்திருந்தாலும் பகுத்தறியும் திறனை புறந்தள்ளி கண்மூடித்தனமாக,மூடத்தனமாக) இன்றளவும் பின்பற்றுவதில் இந்தியர்களை மிஞ்ச வேறு யாருமிலர். குறிப்பாக தென்னிந்தியர்கள். அதிலும் குறிப்பாக தமிழர்கள். 

பெரும்பாலான தமிழ் இல்லங்களில் நகம் வெட்டுவதில் ஆரம்பித்து  திருமணம் செய்வது வரை அனைத்திற்கும் நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம். எம கண்டம், சகுனம்  பார்க்கப் படுவதுண்டு. சாமி பூஜையில் இருந்து பூமி பூஜை வரை,,, பிறப்பில் இருந்து இறப்பு வரை நம்மைச் சுற்றியே வருகிறது ஜோதிடமும் பஞ்சாங்கமும்.  இதுவெல்லாம் போதாத குறைக்கு புதுவிதமான (மூட) நம்பிக்கைகள் பல இன்றும் நம்மை நோக்கி படை எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. உதாரணம்: தமிழ் பெயர்களுக்கும் சம்ஸ்கிருத பெயர்களுக்கும் ஆங்கில எண் கணித ஜோதிட முறையில் பெயர் மாற்றம்.!!!!!பேரண்டத்தில் எங்கோ இருக்கும் கோள்களுக்கும், நம் ஜாதகத்திற்கும், அதை கணித முறையில் வாசிக்கும் அன்றுதான் பெயர் தெரிந்த ஜோதிடருக்கும் இருக்கும் மரியாதை, திருமண விஷயத்தில் நம் வீட்டு பிள்ளைகளுக்கு நாம் கொடுப்பதில்லை. கோள்களையும், ஜாதகத்தையும், ஜோதிடரையும் கடந்த பின்னர் தான் தமிழகத்தில் பெரும்பாலான இரு மனங்களுக்கு திருமணம் நடக்கிறது. 


நம்  கண் முன்னே இருக்கும் பிள்ளைகளுக்கும், அவரது மனங்களுக்கும் கொடுக்கப்படாத மரியாதையும் நம்பிக்கையும் நாம் பார்த்தறியாத கோள்களுக்கும், அன்று மட்டுமே பார்த்த ஜோதிடருக்கும் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்? நாம் இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பட்சத்தில் ஜோதிடத்தின் நம்பகத்தன்மையையும்  பெயர் காரணத்தையும் வரலாற்றையும் என்றாவது ஒரு நாள் பகுத்து ஆராய்ந்திருப்போமா? நான் படித்து அறிந்ததில் இருந்து வெகு சில இதோ...

அ. "ஜாதகம்" என்ற சொல் தமிழ்ச் சொல்லா? ஜாதக முறை இந்தியர்களால் எழுதப்பட்டதா?
                      வேதங்களில் இருந்து பெறப்பட்டதே நமது ஜோதிடக்கலை என்று நாம் பெருமை பேசினாலும், பதிவிலிருக்கும் இந்தியாவின் ஜோதிடக்கலையின் மிகத் தொன்மையான நூல் என்பது "யவன ஜ்யாடகா" (yavana jyaataka) என்பதுவே ஆகும்.  யவனர்களின் (கிரேக்கர்கள்) மாபெரும் படையெடுப்புக்கு இந்தியா அடிபணிந்தது வரலாறு. அக்காலத்தில் (கி.மு. 130-110) யவநேஸ்வரா என்ற கிரேக்க அரசின் குறுநில மன்னனால் எழுதப்பட்ட நூலே "யவன ஜ்யாடகா" ஆகும். கிரேக்க ஜோதிடக் கலை நூலின் சம்ஸ்கிருத தழுவலே இந்நூல். சமஸ்கிருதத்தில் "யவனம்" என்றால் "கிரேக்கம்" என்றும்,. "ஜ்யாடகா" என்றால் "பூர்வீகம்" என்றும் பொருள் படும்.

ஆ. "ஜோதிடம்" தமிழ்ச் சொல்லா? அர்த்தம் என்ன?
                                    "ஜோதிடம்" என்பது "ஜ்யோட்டிஷா" என்ற சம்ஸ்கிருத சொல்லிலிருந்து திரிந்ததே ஆகும். "ஜ்யோட்டிஷ்" அல்லது "ஜ்யோட்டிஷா" என்றால் "வெளிச்சம், மிக உயரத்தில் இருக்கும் அல்லது வானத்தில் இருக்கும் பார்த்தற்கு அரிய  பொருள்" என்று பொருள் படும். 

இ. "Astrology" -  "Astronomy" இரண்டும் அறிவியலின் வெவ்வேறு பிரிவுகளா?
                       17ஆம் நூற்றாண்டு வரை இவ்விரண்டும் அறிவியலின் ஒரே துறையை சார்ந்தவை தான். பெயர்களின் பிறப்பிடம் மட்டும் வெவ்வேறு மொழிகளில். "Astrology" என்பது இலத்தீன (latin) மொழி. "Astro" என்றால் நட்சத்திரம். "logy" என்றால் படிப்பது.   "Astronomy" என்பது கிரேக்கச் சொல். "Astron" என்றால் நட்சத்திரம். "nomy" என்றால் "இயல்பு" அல்லது "இயல்" என்று பொருள். 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இவ்விரு வார்த்தைகளுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டு அந்நூற்றாண்டின் இறுதியில்  "Astrology" என்பது மனவியல் சார்ந்த நம்பிக்கையாக மட்டுமே மாறிவிட்டது.

ஈ. அஷ்டமி, நவமி கெட்ட நாட்களா?
                               முதலில், பிரதமை முதல் சதுர்த்தசி வரை பெயர்க் காரணங்களை பார்ப்போம்.

ஒரு மாதத்திற்கு ஒரு அமாவாசை , ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுகிறது. அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரைக் கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள் ! நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன .

1. பவுர்ணமி , அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை. பிரதம என்றால் முதல். (எ.கா: பிரதம மந்திரி- முதல் மந்திரி) என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. துவிதை என்றால் இரண்டாம் நாள். "தோ/துவி " என்றால் இரண்டு. (எ.கா: துவிச் சக்கர வண்டி என்று சைக்கிளைக் கூறுவர்.)

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள். திரி என்றால் மூன்று.                         
 (எ.கா: திரிசூல்-திரிசூலம்).

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள். (எ.கா: சதுர் - சதுரம் நான்கு பக்கங்கள் கொண்டது.)

5. பஞ்சமி என்றால் ஐந்தாம் நாள் (எ.கா: பாஞ்ச் - பஞ்ச என்றால் ஐந்து எனப் பொருள்.)

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள். "ஷஷ்த" (ShaShTha) என்றால் சமஸ்க்ரிதத்தில் ஆறு என்று பொருள் படும். சமஸ்க்ரித இலக்கணம் நாட்களை பெண்பாலாகக் கருதுகிறது. எனவே "ஷஷ்த" என்பது ஷஷ்தி எனவும் ஷஷ்டி எனவும் திரிந்தது. (எ.கா: சஷ்டி என்பது முருகன் பெயர். முருகனுக்கு ஆறு தலைகளும் ஆறு வீடுகளும் இருப்பது நாம் அறிவோம்)

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். "ஷாப்த்/ஷாத்/சப்த" என்றால் ஏழு. (எ.கா: சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்கள் உள்ளன)

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். "ஆட்/அஷ்ட" என்றால் எட்டு. (எ.கா: அஷ்டவக்கிரம், அஷ்ட கோணல்கள், அஷ்ட லட்சுமி)

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள். நவ என்றால் ஒன்பது. (எ.கா: நவ கிரகங்கள்)

10. தசமி என்றால் பத்தாம் நாள். தஸ் என்றால் பத்து. (எ.கா: தசாவதாரம்)

11. ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள். ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து. இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள். தோ/துவி என்றால் இரண்டு. தஸ் என்றால் பத்து. எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள். திரி என்றால் மூன்று. தஸ் என்றால் பத்து..இதன் கூட்டுத்தொகை பதிமூன்று ஆகும்.

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள். சதுர் (சதுரம்) என்றால் நான்கு. அத்தோடு தஸ் என்ற பத்து சேர்ந்தால் பதினான்கு என ஆகும்.
சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது ? அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருக்கிறதா? இல்லை. மனவியல் ரீதியான காரணங்கள் மட்டுமே உண்டு.

நான் கேள்விப்பட்ட சில மனவியல் ரீதியான காரணங்கள்:

1. ஏன் என்று தெரியாது ஆனால் அது நல்ல நாள் இல்லை என்பது தெரியும். (பெரும்பான்மையானவர்கள் கொடுக்கும் காரணம் இதுவே.!! "பத்தோடு பதினொன்று." "ஊரோடு ஒத்து வாழ்" என்பது இவர்களுக்காகவே எழுதப்பட்டது.)

2. அமாவாசையில் இருந்தோ பௌர்ணமியில் இருந்தோ அஷ்டமி எட்டாவது நாளாகவும், நவமி ஒன்பதாவது நாளாகவும் வருகிறது. 8வது நாளாக அஷ்டமி வருவதால் அதனை சனி ஆட்கொள்கிறது. 9வது நாளாக நவமி வருவதால் அதனை செவ்வாய் ஆட்கொள்கிறது. சனியும் செவ்வாயும் மனிதனின் புது முயற்சிகளுக்கு ஏற்றவை அல்ல. (செவ்வாய் கிழமைகளிலும் சனிக் கிழமைகளிலும் எந்த ஒரு காரியங்களும் தொடங்கப்படாமலிருக்க இதுவே காரணம்.)

3.  எட்டாவது நாள் அஷ்டமியை தன் வசம் வைத்திருப்பவர் ருத்ரர். ருத்ரர் என்பது சிவனின் மிகுந்த கோபம் கொண்ட ரூபம். ஒன்பதாவது நாளான நவமியை ஆள்வது பார்வதி தேவியின் மறு உருவமான அம்பிகா. சிவனும் பார்வதியும் இவ்விரு நாட்களில் மிகவும் கோபமாக காட்சியளிப்பதால், இவை நல்ல காரியங்களைத் தொடங்க உகந்த நாட்கள் இல்லை. (கடவுள் கோபமாக இருக்கும் போது நாம் சந்தோசமாக இருக்கக்கூடாது போலும்).

4. மகா விஷ்ணுவின் அவதாரங்களான ராமர் பிறந்தது நவமி. கிருஷ்ணர் பிறந்தது அஷ்டமி. இருவரும் கடவுள்களாகவேக் கருதப்பட்டாலும், பல இன்னகளுக்கு ஆளானவர்கள். ராமருக்கு 14 வருட வனவாசம், சீதை கடத்தப்பட்டது என பல துயரங்கள். கிருஷ்ணருக்கு தாய் மாமன் மூலமாகவே கொலை முயற்சிகள், தாய் மாமன் கம்சனை கொல்வதன் மூலமாக மட்டுமே கிடைக்கும் அரியணை, குடும்ப சண்டைகள் என அவர் போகும் இடங்களில் எல்லாம் குழப்பம், சண்டைகள், சச்சரவுகள். (கடவுள்களுக்கே அஷ்டமி நவமி இவ்வவளவு இன்னல்களை கொடுக்கும் போது, சாமானியனை விட்டு வைக்குமா?)

5. சனியின் வீரியத்தையும் செவ்வாயின் வீரியத்தையும் தாங்கும் சக்தி மனிதர்களிடம் இல்லை. ஆதலால் அஷ்டமியும் நவமியும் மனிதர்களுக்கு ஏற்ற நாட்கள் அல்ல. சனியாலும் செவ்வாயாலும் விஷ்ணுவையும் சிவனையும் மட்டுமே ஒன்றும் செய்ய இயலாது. எனவே அந்த இரு நாட்களிலும் மக்களாகிய நாம் இவ்விரு கடவுள்களையும் மனமுறுக வேண்டி தஞ்சமடைய வேண்டும். (அப்போ, ராமரும் கிருஷ்ணரும் விஷ்ணுவின் அவதாரங்கள் இல்லையா? அவர்கள் கடவுள்களாய் இருந்திருந்தால் சனியும் செவ்வாயும் அவர்களை எப்படித் தாக்கியிருக்கும்? சில கேள்விகள் என் மனதில் இப்பொழுது. 1.அஷ்டமி நவமி பற்றிய செய்திகள் தவறா?  2.ராமர், கிருஷ்ணர் இருவரும் கடவுள்கள் இல்லையா?  3.அஷ்டமி நவமி பற்றிய செய்திகள் உண்மையாயின்,  ராமரும் கிருஷ்ணரும் சாதாரண மனிதர்கள் தானே. அவர்களை ஏன் வணங்க வேண்டும்? 4. ராமரும் கிருஷ்ணரும் கடவுள்களாய் இருந்தால், அஷ்டமி நவமி பற்றிய செய்திகள் பொய்தானே. அவற்றை ஏன் பின்பற்ற வேண்டும்?)

6. நம் மன்னர்களும் முன்னோர்களும் அஷ்டமியும் நவமியும் போர் செய்வதற்கான நாட்கள் என குறித்திருக்கிறார்கள். போர் செய்து பல உயிர்கள் கொல்லப்படும் நாட்களில் நல்ல காரியங்கள் செய்வது உகந்ததல்ல. இந்த நாட்களில் நமக்கு இருக்கும் சச்சரவுகளை தீர்த்துக்கொள்ளலாமே தவிர நல்ல காரியங்கள் அறவே கூடாது என்றும் கூறப்படுவது உண்டு. (இருப்பதிலேயே முட்டாள்த்தனமான காரணமாக இதுவாகத் தான் இருக்க முடியும். நாம் இன்றும் போர் செய்து கொண்டா இருக்கிறோம்? முன்னர் கூறியது போல் கிரேக்க சாம்ராஜ்யத்தின் ஜோதிடக் கலையின் பால் ஈர்க்கப்பட்டு, அவர்களிடம் இருந்து மொழிப்பெயர்க்கப்பட்ட "யவன ஜ்யாடகா" என்னும் நூலே அறிவியல் ரீதியாக முதன்முதலில் இந்தியாவில் பதிவாகி இருக்கும் ஜோதிடக் கலை நூல். அங்கிருந்து வந்ததுதான் போர் புரிதலுக்கு நாள் குறிக்கும் பழக்கம். கிரேக்க சாம்ராஜ்யத்தின் பெருவாரியான வணிகமும் ஆக்கிரமித்தலும் கடல் வழியாகத்தான் இருந்தது. கடல் வழியாக சென்று போர் புரிவதற்கு உகந்த நேரம் எது என்பதை அவர்கள் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து எழுதினர். பூமி, சந்திரன், சூரியன் இவை மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருக்கும் பொழுது (அமாவாசை அல்லது  பௌர்ணமி) கடல் ஆழிப்பேரலைகளோடு கொந்தளிக்கும். இதை ஆங்கிலத்தில் "ஸ்ப்ரிங் ஹை டைட்ஸ்" (spring high tides) என்பார்கள். இதனுடைய தாக்கம் 3 முதல் 4 நாட்கள் வரை நீடிக்கலாம். ஐந்தாவது நாள், அதாவது பஞ்சமி அன்று அவர்கள் கரை ஒதுங்கினாலும், அவர்கள் களைப்பாற, வேவு பார்க்க, எதிரிகளைத் தேடிச் சென்றடைய, தற்காப்பு கூடாரங்கள் அமைக்க என 2 முதல் 3 நாள் வரை தேவைப்படும். பின்னர் போரிடுவர். பஞ்சமியில் இருந்து 2 அல்லது 3 நாட்களை கழித்தால் அஷ்டமியும் நவமியும் வந்துவிடுகிறது. கிரேக்கர்களின் அறிவியல் ஆய்வுத் திறனைக் கண்டு வியந்த நம் மன்னர்களும் அதை பின்பற்றினர். இதுவே அஷ்டமியும் நவமியும் போரிடுவதற்கு உகந்த நாட்கள் எனக் கூறக் காரணமாயிற்று.)

 செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை , கடவுளை நம்பித்தான் இருக்கிறது என்று நினைத்து உருவாக்கப்பட்ட "நல்ல நேரம் , கெட்ட நேரம்" என்ற பயங்கள் உலகெங்கும்
மனிதனை ஆட்டிப்படைக்கின்றன.(நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்) 
இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம். 

வாரத்தில் செவ்வாய் , சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது( 10 நாட்கள்).

மாதத்தின் அஷ்டமி , நவமி நன்மைக்கு உகந்தது அல்ல( 4 நாட்கள்).

பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை( 2 நாட்கள்).

ஒரு மாதத்தில் வரும் ராகு காலம் , எமகண்டம் , குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 நாட்கள்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள். மொத்தம் 21 நாட்கள்.


இவற்றில் ஒரு அஷ்டமியும் சனியும், ஒரு நவமியும் செவ்வாயும் தற்செயலாக சேர்ந்து வருமாயின் 2 நாட்களை கழித்து விடலாம்.               எனவே 21-2=19 நாட்கள்.

ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 19 நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு செயலின் வெற்றியோ தோல்வியோ தன்னை பாதிக்க கூடாது என்பதற்காகவே மனிதன் விதியை நம்பினான். தன்னுடைய விதியை முன்னதாகவே அறிந்துகொள்ள வழிகளைத் தேடியவனுக்கு ஜோதிட அறிவியல் ஆறுதல் அளித்தது. ஜோதிடம் மூலம் கெட்ட எதிர்கால விதியை அறிந்தவனுக்கு உதவும் கரங்களாக காட்சியளித்திருக்கிறது மனவியல் சம்பந்தப்பட்ட கோவில்களும் கோவிலுக்குள் இருக்கும் உயிரற்ற சிலைகளும். இவ்வாறே மனவியலையும் அறிவியலையும் பிணைத்து விட்டான் அவன்.

எவன் ஒருவன் தன் படைப்புகளையும் சிந்தனைகளையும் நம் மீது திணிக்கிறானோ, அதை எப்போது  நாம் ஏற்றுக்கொள்கிறோமோ அப்போதே நாம் அவனைச் சார்ந்தவனாகி விடுகிறோம். அவன் வென்றுவிட்டவன், நாம் தோற்றுவிட்டவர்கள். அதே மன நிலையோடு இருந்ததால்தான் நமக்கு அறவே சம்பந்தமற்ற துருக்கியர்களும், மொகலாயர்களும், சுல்தானியர்களும், யவனர்களும்,போர்ச்சுகீசியர்களும், பிரெஞ்சுக்காரர்களும், டச்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் பல நூறு வருடங்களாக நம்மை ஆண்டார்கள். பல நூறு வருடங்களுக்கு முன்பு தோற்றோம். இன்றும் எழவில்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் நாம் தவறாக ஏற்றுக்கொண்டதை எல்லாம் இன்றும் கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் பேணி காத்துக் கொண்டிருக்கிறோம். நம் பிள்ளைகளுக்கும் ஊட்டி வளர்த்துக் கொண்டிருக்கிறோம். நம்பிக்கைகளை நான் சாடவில்லை. ஆனால் தவறான நம்பிக்கைகளை விதைத்து  அவர்களையும் அல்லவா தோற்கடித்துக் கொண்டிருக்கிறோம். நேற்றைய தினம் கடந்து விட்டது. நாளைய நம் சமூகம் வெல்ல இன்றைய சமூகம் விழித்துக்கொள்ள வேண்டும். அதற்காக நாம் செய்ய வேண்டியதெல்லாம் "பகுத்தாராய்தல்". நாமும் செய்வோம் நம் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுப்போம். மூடநம்பிக்கை இல்லாத வளமான, வலிமையான சமூகத்தில் நம் பிள்ளைகளாவது வளரட்டும்.

                                                                          -போ. ரவிசந்திர பிரகாஷ்.

2013年6月8日星期六

பல கிறுக்கல்களில் சில - 12 ஊனமற்ற அன்பு

                                                         ஊனமற்ற அன்பு 


"முஹம்மது பாய்..., கறி ரெடியா??

"இந்தா!! ரெண்டு நிமிஷம்..."

"அட சீக்கிரம் கொண்டு வாங்க பாய், வெங்காயம், தக்காளி அடிப் புடிக்குது".   

"என்னப்பா,,!! ஏமாந்தவங்கதானேனு மொக்க மொக்கையான கறியெல்லாம் இங்க கொண்டு வந்திருக்கியா? எங்க பாப்போம்?" 

மாஸ்டர் பாத்திரத்தைக் கிண்ட, கறிக்கடை பாய், கொண்டு வந்த கறித்துண்டுகளைக் கழுவ, முதியவர் ஒருவர் அருகிலிருந்தவாறே சமையல் தரத்தை ஆய்வு செய்துகொண்டிருக்க, சந்திரன், தான் கொண்டு வந்த இனிப்புகளை அங்கு இருந்த குழந்தைகளுக்குக் கொடுக்கத் தொடங்கினான். இனிப்புகளை வாங்கிய குழந்தைகளின் முகத்திலிருந்த சந்தோசத்தைப் பார்த்து, தானும் மகிழ்ந்தான். பின்னர் குழந்தைகளோடு சேர்ந்து அவர்கள் தங்குமிடம், வகுப்பறைகள், உணவருந்துமிடம் என அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான். "பாய், தலையணை, செருப்பு" என குழந்தைகளிடம் என்னவெல்லாம் இல்லை என எழுதி வைத்துக்கொண்டான். அடுத்த முறை வரும்பொழுது வாங்குவதற்காக.                                                                    


                                  ---------------------- 30 நிமிடம் கழிந்தது. -----------------------


"யோவ் கறி வெந்திருச்சு..., அரிசி எங்கய்யா??"  மாஸ்டர் கத்த எடுபிடி வேகமாய் சந்திரனிடம் "சார், அரிசி........." என்று இழுத்தான். "சாரி, அரிசி மூட்டைய கார் டிக்கிலயே வச்சிட்டேன். இந்தாங்க சாவி, எடுத்துக்கோங்க. அப்பிடியே அதுல இருக்கும் கிரிக்கெட் பேட், பந்து எல்லாத்தையும் எடுத்திருங்க.. ஓகே?" எனச் சொல்லி, கார் சாவியை எடுபிடியிடம் கொடுத்தனுப்பினான். காருக்குச் சென்ற எடுபிடியை சில சிறுவர்கள் தொடர்ந்தனர். காருக்குள் வேறு என்னென்ன  இருக்கிறது என்பதை அறிய ஒரு கூட்டம், காருக்கு உள்ளே எப்படி இருக்கிறது என்பதை பார்க்க ஒரு கூட்டம். 

கிரிக்கெட் மட்டையும் பந்துகளையும் பார்த்தவுடன் அனைவருக்கும் குஷி.!! ஒருவன் மட்டும் "விளையாடலாமா?" என்றான். சந்திரன் "விளையாடலாம், ஆனா வெயில் அடிக்குதே!" என்றாற்போல் வானத்தை நோக்கினான். "பரவாயில்ல, இன்னைக்கு ஒரு நாள் விளையாடுங்க" என்று சந்திரனை இழுத்துச் சென்றான் அச்சிறுவன். குழந்தைகளுடன் சேர்ந்து சிரித்து விளையாடி அவன் களிப்புற்றிருந்தாலும் சிறிது களைப்பாற வேண்டியிருந்தது.  களைப்பாறினான்.






                                           -------------------1 மணி நேரம் கழிந்தது. -------------------


களைப்பாறிய  சந்திரனிடம் "சாப்பிடலாமா?" என்றார் பள்ளி மேலாளர். "ஓ.., போலாமே" என்றான்.  "போறியா என்ன வேணும்"......... என ஆடுகளத்தில் இருந்து பிள்ளைகளை விரட்டத் துவங்கினார்.

உணவருந்துமிடம்....... குழந்தைகள் அனைவரும் வரிசையில் வந்து அமர்ந்தனர். சந்திரனும் அவர்களுடன் அமர்ந்தான். அனைவருக்கும் அலுமினியத் தட்டு தரப்பட்டது. இவனுக்கு மட்டும் வாழை இழை. 
"எல்லாரும் தட்டுல சாப்பிடுறாங்க எனக்கும் அந்த மாதிரி ஒரு தட்டுலயே சாப்பாடு போடுங்க" என்றவனிடம் "இல்ல சார், பிள்ளைங்களுக்கு இழைல சாப்பிடத் தெரியாது., அதுவுமில்லாம நீங்க இந்த தட்டுல சாப்பிடக் கூடாது. பரவாயில்ல சார் பிள்ளைங்களுக்கு இதெல்லாம்  பழகிடுச்சு., நீங்க இழைலயே சாப்பிடுங்க" என்றார் மேலாளர். அவன் எழுதி வைத்திருந்ததில் "புது தட்டுக்கள்" என்பதையும் சேர்த்துவிட்டு  பின்னர் சாப்பிட்டான்.  சாப்பிட்ட பின் குழந்தைகள் அனைவருக்கும் பள்ளியின் முகப்பில் வைத்து மிட்டாய்களை வழங்கினான். மிட்டாய்களை வாங்கிய குழந்தைகள் சந்தோசமாக மாலை வகுப்புக்குச் சென்றமர்ந்தனர். சந்திரனும் புறப்பட ஆயத்தமானான்.


 மிகச்சரியாக அந்நேரம், ஒரு கணவன் மனைவி தங்கள் குழந்தையுடன் அங்கு வந்தனர். "சார், இது சரிப்பட்டு வராது., எல்லாம் சரி ஆயிரும்னு சொல்லித்தான் அனுப்பி வச்சீங்க.., ரெண்டு மாசம் ஆயிருச்சு, இது இன்னும் பேச மாட்டேங்குது, கூப்டா கேக்கவும் மாட்டேங்குது. இனிமே எங்களால இத வீட்ல வச்சி சமாளிக்க முடியாது. நீங்களே வச்சுக்கோங்க." எனச் சொல்லி குழந்தையை அங்கே விட்டுச் சென்றனர். அழுது கொண்டே இருந்த குழந்தையைப் பார்த்ததும் சந்திரனுக்கு அங்கிருந்து போக மனம் ஒப்புக்கொள்ளவில்லை.


 ஐந்தே வயது சிறுமி அவள். சாக்லேட் கொடுத்தான் அவள் வாங்கவில்லை. பந்துகளைக் கொடுத்தான் அதையும் வாங்காமல் அழுது கொண்டே இருந்தாள். எல்லாவற்றையும் அவளிடமிருந்து தள்ளிவைத்து விட்டு, அவளருகில் சென்று, தலை மேல் கை வைத்து "அழாத டா கண்ணா, அழக்கூடாது" என அவள் கண்ணீர் துடைத்து கை நீட்டினான். அவன் முழுவதுமாய்த் தன் கைகளை நீட்டுவதற்கு முன்பாகாவே, சிறுமி அவன் மேல் சாய்ந்து கொண்டாள். அழுது கொண்டே சாய்ந்தவள், உறங்கும் வரை அவனைவிட்டுப் பிரியவில்லை. விரித்திருந்த பாயில் அவளை கிடத்திவிட்டு கிளம்பினான்.


"சார் போறதுக்கு முன்னால இந்த புத்தகத்துல கையெழுத்து போட்ருங்க, ப்ளீஸ்" என மேலாளர் வழிமறித்தார். புத்தகத்தை வாங்கிப் பார்த்த சந்திரனுக்கு ஆச்சர்யம். "பரவாயில்லையே இத்தன பேர் நல்லது செய்யுறாங்களே!!" என்றான். சலித்துக்கொண்ட மேலாளர், "என்ன இருந்து என்ன சார் பிரயோஜனம், இதுங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கலையே. 1 லட்சம் பேர் இருக்குற ஊர்ல 100 குழந்தைங்க இந்த மாதிரி இருக்குதுங்க. அதே ஊர்ல 200 பேர் நல்லா சம்பாதிக்கிறவங்களும்  இருப்பாங்க. அந்த 200 பேர்ல 100 பேர் ஒவ்வொருத்தரா 3 மாசத்துக்கு ஒரு நாள் வந்து இவங்களுக்கு சாப்பாடு போட்டாலே இங்க தினமும் விருந்துதான். மொத்தமா காசு கொடுத்துட்டு போறவங்களும் உண்டு. அடுப்பு எரியிறதுக்கெல்லாம் இங்க வழி இருக்கு. ஆனா அடுப்ப மட்டுமே எரிய வச்சு இவங்க வயித்தெரிச்சல அணைக்க முடியாது சார். 5 வயசு குழந்தை அவ, மிட்டாய் கொடுத்தீங்க, பந்து கொடுத்தீங்க, அதுக்கெல்லாம் அடங்காதவ, அவளோட தலைய தொட்டு, தடவி, கண்ணீர் தொடைச்சி விட்டவுடனே எப்பிடி வந்து ஒட்டிக்கிட்டா பாத்தீங்களா? அதுதான் இவங்களுக்கு தேவை. நான் பேசி என்ன சார் ஆகப்போகுது. நீங்க கிளம்புங்க." என புத்தகத்தை வாங்கிக்கொண்டு வழியனுப்பி வைத்தார்.


வண்டியினுள் அமர்ந்தவன், தன சட்டைப் பையில் இருந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தான். அதில் "1.சாப்பாடு, 2.மிட்டாய்கள், 3.பாய், 4.தலையணை, 5.செருப்பு, 6.புது தட்டுக்கள்" என்ற வரிசையில் குழந்தைகளுக்குத் தேவையானவை எழுதப் பட்டிருந்தன. தன் பேனாவை எடுத்து மற்றுமொன்றை உள்ளே புகுத்தி, வரிசையை மாற்றி எழுதினான். அவ்வரிசை 
"1.அன்பு, 2.பாசம், 3.சாப்பாடு, 4.மிட்டாய்கள், 5.பாய், 6.தலையணை, 7.செருப்பு, 8.புது தட்டுக்கள்."  அடுத்த முறை வரும்பொழுது, வாரி இறைக்கும் இறைவனாய் இல்லாமல், கட்டித் தழுவும் மனிதனாய் வர முடிவெடுத்தான். 

2013年4月16日星期二

பல கிறுக்கல்களில் சில - 11 எல்லாம் வல்ல மனிதன்

                                                         எல்லாம் வல்ல மனிதன்            


                                     மதம் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? நடைமுறையில் சாத்தியமல்லாத ஒன்றைப் பற்றி யோசிப்பதுதானே கற்பனை. என் கற்பனைகளையும் யூகங்களையும் பொறுமையோடும் பெருமையோடும் கேட்பதானால் அது என் தனிமைத் தோழனாக மட்டுமே இருக்க முடியும். அவனுடன் பகிர்ந்து கொண்ட சில, இதோ உங்களுக்காக. என் எழுதுகோல் எழுதுவதற்கு ஆயத்தமாய் இருந்தாலும், எழுதுவதற்கு முன்பாக உங்களிடம் சொல்ல வேண்டியதை சொல்லி விடுகிறேன். நான் ஒன்றும் திருக்குரானையும், விவிலியத்தையும், கீதையும் முழுதாய் படித்துவிட்டு இதை எழுதவில்லை. இதை எழுதவதற்கு முழுத் தகுதியும் எனக்கில்லை என்பதுவும் தெரியும். ஆனாலும் மேற்கூறப்பட்ட புனித நூலகளனைத்தும் மனிதனால் இயற்றபெற்றவையே, கடவுள்களாலல்ல என்ற எண்ணத்தினால் எழுத துணிந்துவிட்டேன். இங்கே எழுதப்படும் யாவும் என் சொந்த கருத்தும் கற்பனையுமேயன்றி யாரையும், எந்த ஒரு மார்க்கத்தினரையும், சமூகத்தாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல.

                                   மனிதன் மனிதனாய் இருந்து மனிதம் பின்பற்றுவதற்கு மனிதனால் இயற்றப்பட்டவையே எந்த ஒரு மதமும். இன்றோ மதங்களின் பிடியில் மனிதன் மனிதம் மறந்து, மனிதநேயம் மறந்து மதமார்க்கங்களின் அடிப்படைக்  கொள்கைகளை விட்டெறிந்தேவிட்டான். மதம் கூறும் மனிதத்தின் அடிப்படைக் கொள்கைகள் இரண்டு. 1.அன்பு, 2.சகிப்புத்தன்மை. மதங்கள் இவையிரண்டை மட்டுமே போதித்திருந்தால் மத அடிப்படையிலான போர்களும் இனப்படுகொலைகளும் நடந்திருக்குமா? மனிதம் மறந்த மனிதன் மதத்தின் பிடியில் சிக்கி மூடனாகவும் முட்டாளாகவுமே மாறிவிட்டான். மதம் சார்ந்த சம்பிரதாயங்களின் உள்ளார்ந்த அறிவியல் காரணம் எத்தனை மதவாதிகளுக்குத் தெரியும்?



                                 இனம், நிறம், மொழி, பணி, கலாசாரம், இடம், உணவு, உடுப்பு, பொருளாதாரம், ஜாதி என பல அடிப்படைகளில் பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட மனித இனம்  ஒன்றுபட அன்பையும், சகிப்புத்தன்மையும், ஏற்றுக்கொள்ளுதலையும் மட்டுமே போதிக்கும் மதங்கள் இன்றுவரையில் செய்ததுதான் என்ன? "எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே" என போதித்த, போதிக்கும் மதங்கள், குறிப்பாக தத்தமது கடவுள்களையும் வழிபாட்டு முறைகளையும் வாழ்க்கை நெறிகளையும் மட்டுமே போதிப்பதுவும் பரப்ப நினைப்பதுவும் ஏன்? கோவிலுக்குள், "அனைவரிடமும் அன்பு செலுத்து" என்று வேதம் ஓதும் மத குருமார்கள், கோவிலுக்கு வெளியே கையேந்தியவர்களிடம் ஒரு நாளும் அன்பு செலுத்துவதில்லையே.. ஏன்? கையேந்தியவர்களை தொடுவதற்குக் கூட கூச்சப்படுகிறார்களே... ஏன்? இந்தியா மட்டுமன்றி அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்காவிலும் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. மதவாதிகள் கடவுளை சேவித்துவிட்டு சக மனிதர்களை மறந்து போகின்றனர்.

          
                              மதங்களால் ஆனது அதிகமானாலும், அழிந்தது அதைவிட அதிகம். எத்தனை உயிர்களை குடித்திருக்கும் ஒவ்வொரு மதமும்?! அழிக்கத்தெரியாத மதங்கள் அழிந்திருக்கிறது, அழிந்துகொண்டும் இருக்கிறது. அன்றிலிருந்து இன்று நடந்த பாஸ்டன் குண்டு வெடிப்பு வரை அனைத்து வன்முறைகளுக்கும் மதச்சாயம் உண்டு. உண்மையாகவே மதத் தொடர்பு இல்லாவிட்டாலும் மதச்சாயம் பூசப்பட்டு அரசியல் நாடகங்கள் நடந்தேறிய கதைகளும் பல உண்டு. பெரும் போர்களாகட்டும், சிறு வன்முறைகளாகட்டும் இனப்படுகொலைகளாகட்டும், எக்காலத்திலும் முதலில் பாதிக்கப் பட்டவர்கள்  உணர்ச்சிகளால் உந்தப்பட்ட சாமானியர்களேயன்றி, தலைவர்களோ, அரசாள்பவர்களோ அல்ல. இவ்வழியில் யோசித்தலானால் இரு யூகங்கள் என் மூளைக்கு எட்டுகிறது. 1. முதலில் நல்லவர்களால் எழுதப்பட்ட மதங்களை, மத உணர்வுகளை, பின்நாட்களில் வந்த தலைவர்களும் மன்னர்களும் அரசியல் லாபங்களுக்காக தவறுதலாக திரித்து பிரகடனப் படுத்தியிருக்கலாம்.. அல்லது 2. முதலில் எழுதியவர்களே தம் மார்க்கம் சார்ந்த மக்கள் மட்டுமே தழைத்தோங்க வேண்டும் என்ற கொடிய எண்ணத்துடன் எழுதியிருக்க வேண்டும். 

       
                            காரணம் எதுவானாலும் மதரீதியாக  நாம் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும், காயப்படுதிக்கொண்டும், அழித்துக் கொண்டும் இருக்கிறோம், நேரடியாக அல்லாவிடினும் மறைமுகமாக, என்பதை மறுப்பதற்கில்லை. மதங்களின் புனிதம் காக்க போர் நடத்துகிறோம். அடித்தாலும் சிரி என்று மதங்கள் கூறியது என்னாயிற்று? மதங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் உண்மையாகவே இருந்திருப்பானாயின் இவையெல்லாம் நடந்திருக்குமா? 



                               சிறுவயதில் என் அம்மா சொன்னதையெல்லாம் உண்மையென  நம்பியிருக்கிறேன். அனைத்து அம்மாக்களும் சொல்வதுதான். "இவ்வுலகத்தை படைத்தது கடவுள். மனிதர்களை படைத்தது கடவுள். அவன் அனைவரிடத்தும் அன்பு கொண்டவன். கேட்பதெல்லாம் வாரி வாரி இறைப்பவன். அதனால்தான் அவன் இறைவன்." பகுத்தறியும் திறன், என்னுள் வந்தவுடன் தான் தெரிந்தது அம்மாகூட என்னிடம் பொய் சொல்லுவாள் என்று. அனைவரையும் உருவாக்கியவன், அனைவரிடமும் அன்பு கொண்டவன், ஏன் ஒரு சிலருக்கு மட்டும் சில குறைகளைக் கொடுக்க வேண்டும்? வாரி வாரி கொடுப்பவனானால் குறைகளை நிவர்தியாவது செய்யலாமே. என்னிடமே பொய் சொல்லிவிட்டாள் என் அம்மா. அவளைச் சொல்ல வைத்தது அவளது நம்பிக்கை. அவள் நம்பிக்கை வீண்போகாமல் இருக்க இன்றளவும் அவளுக்காக அவள் கூறிய எல்லாம் வல்ல இறைவனை நான் தொழுகிறேன்.


                            
                             இறைவன், அண்ட சராசரத்தையும், ஒட்டுமொத்த மனித குலத்தையும், ஜீவராசிகளையும் படைத்தவனே ஆகட்டும். ஆனால் அவனுக்கே உயிரும், உருவமும் கொடுத்தது "எல்லாம் வல்ல மனிதன்". நம்மைப்போன்ற ஒருவனால் இயற்றப்பட்டவைதான் கடவுளும் மதமும். இவைகளை நாம் விட்டொழியும் நாளில் தான் மாயந்தொழிந்த  மனிதம் மீண்டும் உயிர்த்தெழும். மதம் படித்த மனிதன் மதம் பிடித்த மனிதனாவதற்கு முன்பாக மனிதம் மீண்டும் உயிர்த்தெழும் என்ற நம்பிக்கையோடு


                                                                                           -போ.ரவிச்சந்திர பிரகாஷ் . 
                          
                                                          
                                        
                                                                           

2013年3月4日星期一

பல கிறுக்கல்களில் சில - 10 மூதாட்டியும் முத்தமும்

                                                         மூதாட்டியும் முத்தமும் 

                                                 
                                                          பூக்களையும் இலைகளையும் உதிர்த்துவிட்டு வெண்பனியைச் சுமந்து நிற்கும் மரங்கள் சாலையின் இருபுறங்களையும் அலங்கரித்திருந்தன. பேருந்தினுள் கைக்கோர்த்தும் , உதடுகளை உரசியும் பயணித்துக் கொண்டிருக்கும் காதலர்கள்.  பொம்மை மாதிரியான கைக்குழந்தையைக் கொஞ்சிகொண்டிருக்கும் தாய். மற்றவர்களைப் பொருட்படுத்தாமல் சிரித்துக்கொண்டும் விளையாடிக்கொண்டும் பயணிக்கும் பள்ளிச் சிறுவர்கள். இறங்கும் முன்பு கைப்பையினுள் இருக்கும் கண்ணாடியை எடுத்து முகத்தை சரி செய்துகொள்ளும் அழகுப்பதுமைகள். யாரையும் பார்த்து எளிதில் சிரித்துவிடும் மத குருமார்கள், இவர்களுடன் ஒரு மூதாட்டி அவர் மகன்  மகனின் மனைவி, பேத்தி ஆகியோருடன் பயணித்துக் கொண்டிருந்தார். அழகுச்சிறுமி என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவளைப் பார்த்துச் சிரித்தேன். வேகமாய் வெட்கப்பட்டு முகத்தைத் திருப்பியவள் தன் பாட்டியிடம் நான் சிரித்ததைச் சொன்னாள். இம்முறை மூதாட்டி என்னைப் பார்த்துச் சிரித்தாள். இதைப் பார்த்த சிறுமி தன் பாட்டியிடம் "அவரை உனக்குத் தெரியுமா? அவர் ஏன் கருப்பா இருக்கார்? நம்ம ஏன் வெள்ளையா இருக்கோம்? அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்யாசம்?" என்றவாறு விடாது வினவிக்கொண்டே வந்தாள். தர்மச்சங்கடமடைந்த மூதாட்டி "அவர் வேற ஊர்ல இருந்து வந்திருக்காரு அவங்க ஊர்ல எல்லாரும் அப்படித்தான் இருப்பாங்க" என்றாள். எனினும் சரியான பதில் கிடைக்காததால், அவளும் விடுவதாய் இல்லை. இம்முறை மூதாட்டி வருந்துவதாய்ச் செய்கை செய்து முறுவல் பூத்தார். "பரவாயில்லை" என நானும் செய்கை செய்தேன். சிறுமியிடம் கொஞ்சமும் எரிச்சலடையாத மூதாட்டி "பூனையில் எப்படி கருப்பு பூனை, வெள்ளை பூனை, மஞ்சள் பூனைனு நிறைய வகை உண்டோ அதே மாதிரிதான் மனிதர்களும். நிறம் மாறினாலும் அவங்களுக்கும் நமக்கும் எந்த வித்யாசமும் இல்லை" என்றாள். சமாதானம் அடைந்த சிறுமியிடம் மூதாட்டி தான் கையில் கொண்டிருந்த பூச்செண்டிலிருந்து ஒரு பூவை மட்டும் எடுத்து என்னிடம் கொடுக்கச் சொன்னாள். சிறுமியும் தயக்கமில்லாமல் கொண்டுவந்து கொடுத்தாள்.

                                           அந்நியக் குழந்தையின் பரிசும்,  மழலையின் கேள்விகளும், மூதாட்டியின் அன்பு பதில்களும், சிறுவர்களின் சிரிப்பும் விளையாட்டும், முத்தங்களோடு கூடிய காதல் பரிமாற்றங்களும், பனியின் வெள்ளை அழகும், பதுமைகளின் கொள்ளை அழகும்.....காலை பேருந்துப் பயணம் இதைவிட சிறப்பாக அமைந்துவிடமுடியாது. நான் இறங்கவேண்டிய இடத்தில் மூதாட்டியும் இறங்க ஆயத்தமானாள். வழியை மறைத்து நின்ற நான் அவளுக்கு வழிவிட்டு ஒதுங்கினேன். பாட்டி இறங்கப்போவதை அறிந்த பேத்தி, தன் அப்பாவிடம், "அப்பா, திரும்ப பாட்டி எப்போ வீட்டுக்கு வருவாங்க" என்று கேட்டு முகம் புதைத்து சோகமானாள்.

                                                பேருந்திலிருந்து இறங்கிய மூதாட்டி, ஒரு கையில் பேத்தி கொடுத்த பூச்செண்டும், மறுகையில் இனிப்பு மிட்டாய்களோடும் நின்று கொண்டிருந்தாள். கூனிய முதுகுடனும், குறுகிய தோளுடனும், சுருங்கிய தோலுடனும், தளர்ந்த கால்களுடனும், சாலையைக் கடக்க மிகவும் சிரமப்பட்டாள். வேகமாய் நகரும் இளைய தலைமுறையுடன் நானும் மிக வேகமாய் நகர்ந்தேன். என் கையில் வழக்கமாய் இல்லாத ஏதோ ஒன்று இருப்பது புரிந்தது. மூதாட்டி, சிறுமியிடம் எனக்காக கொடுத்து அனுப்பிய பூ. சட்டென என் கால்கள் நகர மறுத்தன. மிக வேகமாய் முன்னோக்கி நகர்ந்த இளையவர்களிடமிருந்து விலகி பின்னோக்கி நடந்தேன். மூதாட்டிக்கு அருகில் போய் என் கை நீட்டினேன். அதுவரையும் குனிந்தே நடந்து வந்த அவர் நிமிர்ந்து என்னைப் பார்த்து அன்பாய் சிரித்தார். சாலையைக் கடந்த பின் "எங்கே போக வேண்டும் அருகிலானால் நானும் வருகிறேன்" என்றேன். பிடிக்கப்பட்ட என் கை இன்னும் விடப்படவில்லை. "அருகில் தான்" என்றாள். அவளுடனேயே நடந்தேன். அதன் பின் என்னுடன் எதுவும் பேசவில்லை. கை பிடி மட்டும் இறுகியது.

                                               300 அடி தாண்டியிருப்போம். ஒரு கட்டிட வளாகம், மிகவும் அமைதியான, இறுக்கமடைந்த இடமாகத் தெரிந்தது. அங்கு இருந்த அனைவரும் இம்மூதாட்டியைப் போலவே, தளர்ந்த உடலும், முறிந்த மனமும் கொண்டவர்களாய்த் தெரிந்தார்கள். அந்த நிமிடம்தான் என் மனதுக்கு அந்த மூதாட்டி என் கையைப் பிடித்த விதம் பிடிபட்டது. ஆம், அது முதியோர் இல்லமே. சற்றே இறுக்கத்துடன் இருந்த என்னைப் பார்த்து சிரித்தாள். பின் தன் பேத்தி கொடுத்த மிட்டாயில் ஒன்றை என் கையில் திணித்தாள். என்னிடமோ அவள் கொடுத்த பூ மட்டுமே இருந்தது. அவளிடம் அதைக் கொடுத்தேன்.. சிரித்த அவள், என் முகம் தொட்டு, முத்தமிட்டு ஆசீர்வதித்தாள். சுருக்கங்கள் அவள் தோலில் மட்டுமே. கனத்த மனதுடன் அங்கிருந்து வெளியேறினேன். மிக வேகமாக ஐரோப்பிய கலாச்சாரத்துக்கு மாறி வரும் நாம், முதியோர் இல்ல கலாச்சாரத்தையும் இங்கிருந்துதான் கற்றுக்கொண்டிருப்போமோ? மிக அழகாகத் தெரிந்த ஐரோப்பியர்களைக் கண்டு அருவருக்கிறேன் இப்பொழுது. 

2013年3月3日星期日

பல கிறுக்கல்களில் சில - 9 பதின்பருவம் - "பிரிவினைப்பருவம்".


   பதின்பருவம் -  "பிரிவினைப்பருவம்".
                     
                            பதின்பருவம்: இடைவெளிகள் ஏற்படுத்தும் பருவம் என்றே சொல்லவேண்டும்.    பிரிவினைப் பருவம்  என்றும் சொல்லலாம். பள்ளிப்பேருந்தில் இருந்து  இறங்கியவுடன் கட்டியணைத்து, முத்தமிட்டு வரவேற்கும் அம்மா, ஏனோ, நாம் வளர்ந்து, சைக்கிளில் வந்திறங்கும்போது அந்த வரவேற்ப்பை கொடுப்பதில்லை. இந்த இடைவெளி, இந்த பருவத்தில், அணைத்து உருவுகளிலும் விழுகிறது. தாய்-மகன், தாய்-மகள், தந்தை-மகன், தந்தை-மகள், அண்ணன்-தங்கை, அக்காள்-தம்பி. உண்மை. நாமும் தொடாமலேயே அன்பையும் பாசத்தையும் பரிமாறக் கற்றுகொண்டோம். ஆயினும் மிகச் சமீபத்தில், இதையெல்லாம் தவரவிட்டுடோமே என என்னும் அளவுக்கு ஒரு சம்பவம்.:  
                            என் அயல் (ஆங்கிலக் குடியுரிமைப் பெற்ற இந்தியன்) நாட்டு நண்பன் ஒருவன் தன் பெற்றோர்களை வழியனுப்ப விமானநிலையம் போனான். நானும் துணைக்குசென்றேன். அவன் பெற்றோர்களை ஆரத்தழுவி, முத்தமிட்டு வழியனுப்பி வைத்தான். நான் அவர்களையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏனோ கண்கள் கலங்கியது. என்னைப்  பார்த்த  நண்பன் என்னிடம் பேசத் தொடங்கினான்.  
                           அவன்: Dude! You alright?
                            நான்:   Certainly. 
                           அவன்: Come on dude. You are not. You homesick?  
                            நான்:  I don't know. May be I am. Its just that I can't remember the last time I hugged or kissed my parents. I regret I missed all these moments.
                           அவன் : You don't have to. Coz its not your fault. Its the society. And you guys bother too much about the society.  
                     
                   அவன் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்தது. . "இதோ பாருடா! மீசை அரும்பியவனுக்கு பெற்றோர்களின் பாசத்தை!' என மற்றவர்கள் ஏளனம் செய்துவிடுவார்களோ என்ற எண்ணமும், கூச்ச  உணர்வும் நம்மை கொஞ்சம் தள்ளித்தான் வைத்துவிட்டன.
                           
                     ஒரு விடுமுறையில் என்னுடன் தொட்டுப்பிடித்து, கண்ணாமூச்சி, சமயங்களில் கிரிக்கெட்டும் விளையாடிய பக்கத்து வீட்டு அக்காக்களும்  எதிர் வீட்டு தங்கைகளும் அடுத்த விடுமுறையில் வீடினுள்ளயே இருந்தார்கள். (இருத்திவைக்கப்பட்டார்கள்). இவ்வளவு ஏன்?  என் கைக்கோர்த்து, தோலும், தோளும், உரசித் தோழமைப் பயின்ற தோழிகள் என ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் சென்றனர். மூன்றாம் வகுப்பில் என்னுடன் ஒரே மோட்டார் சைக்கிளில், ஒரே இருக்கையில் (மூன்று நபர்களாக, வண்டி ஓட்டிய அண்ணனையும் சேர்த்து) பள்ளிக்கு வந்த என் தோழி, ஐந்தாம் வகுப்பிலிருந்து ஆட்டோவில் சென்றாள் (அனுப்பிவைக்கப்பட்டாள்).                                                

                               இப்படியே பிரிவுகள் வளர,  அந்த பிஞ்சு வயதிலேயே, எங்களுக்கு, ஆண்களும் பெண்களும் பழகுவது தவறென்ற தவறான விஷயத்தை மிகச்சரியாக எடுத்துரைத்தது யார்? பெற்றோர்களா? சினிமாவா? இல்லை ஐந்தாம் வகுப்பிலிருந்தே ஆண் மானாக்கரையும் பெண் மானாக்கரையும் தனித்தனியாக அமரச் செய்த பள்ளிக்கூடங்களா? பேருந்துகளிலும் ரயில்களிலும் "ஆண்கள்", "பெண்கள்" என இன்றளவும் எழுதும் அரசையா? யாரைச் சாடுவது?

                          கிராமத்துத் தோழிகளுடன் கண்ணாமூச்சி, பக்கத்து வீட்டுத் தோழிகளுடன் மணல் விளையாட்டு. தங்கைகளுடன் யானை விளையாட்டு, அக்காக்களின் உப்புமூட்டை, பள்ளித்தோழிகளிடம் இருந்து கிட்டும் இடைவெளி நேர குச்சி மிட்டாயும், எழந்தப்பழமும், நெல்லிக்காயும் எல்லாமும் ஒரேடியாக நின்று  போகும் இப்பருவம், எல்லாவற்றிற்கும் மேலாக முதல் தோழியாம் அன்னையின் மடி சாய்ந்து உறங்கும் பழக்கம் நின்று போகும் இப்பருவம், "பிரிவினைப்பருவம்".