2013年4月16日星期二

பல கிறுக்கல்களில் சில - 11 எல்லாம் வல்ல மனிதன்

                                                         எல்லாம் வல்ல மனிதன்            


                                     மதம் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? நடைமுறையில் சாத்தியமல்லாத ஒன்றைப் பற்றி யோசிப்பதுதானே கற்பனை. என் கற்பனைகளையும் யூகங்களையும் பொறுமையோடும் பெருமையோடும் கேட்பதானால் அது என் தனிமைத் தோழனாக மட்டுமே இருக்க முடியும். அவனுடன் பகிர்ந்து கொண்ட சில, இதோ உங்களுக்காக. என் எழுதுகோல் எழுதுவதற்கு ஆயத்தமாய் இருந்தாலும், எழுதுவதற்கு முன்பாக உங்களிடம் சொல்ல வேண்டியதை சொல்லி விடுகிறேன். நான் ஒன்றும் திருக்குரானையும், விவிலியத்தையும், கீதையும் முழுதாய் படித்துவிட்டு இதை எழுதவில்லை. இதை எழுதவதற்கு முழுத் தகுதியும் எனக்கில்லை என்பதுவும் தெரியும். ஆனாலும் மேற்கூறப்பட்ட புனித நூலகளனைத்தும் மனிதனால் இயற்றபெற்றவையே, கடவுள்களாலல்ல என்ற எண்ணத்தினால் எழுத துணிந்துவிட்டேன். இங்கே எழுதப்படும் யாவும் என் சொந்த கருத்தும் கற்பனையுமேயன்றி யாரையும், எந்த ஒரு மார்க்கத்தினரையும், சமூகத்தாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல.

                                   மனிதன் மனிதனாய் இருந்து மனிதம் பின்பற்றுவதற்கு மனிதனால் இயற்றப்பட்டவையே எந்த ஒரு மதமும். இன்றோ மதங்களின் பிடியில் மனிதன் மனிதம் மறந்து, மனிதநேயம் மறந்து மதமார்க்கங்களின் அடிப்படைக்  கொள்கைகளை விட்டெறிந்தேவிட்டான். மதம் கூறும் மனிதத்தின் அடிப்படைக் கொள்கைகள் இரண்டு. 1.அன்பு, 2.சகிப்புத்தன்மை. மதங்கள் இவையிரண்டை மட்டுமே போதித்திருந்தால் மத அடிப்படையிலான போர்களும் இனப்படுகொலைகளும் நடந்திருக்குமா? மனிதம் மறந்த மனிதன் மதத்தின் பிடியில் சிக்கி மூடனாகவும் முட்டாளாகவுமே மாறிவிட்டான். மதம் சார்ந்த சம்பிரதாயங்களின் உள்ளார்ந்த அறிவியல் காரணம் எத்தனை மதவாதிகளுக்குத் தெரியும்?



                                 இனம், நிறம், மொழி, பணி, கலாசாரம், இடம், உணவு, உடுப்பு, பொருளாதாரம், ஜாதி என பல அடிப்படைகளில் பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட மனித இனம்  ஒன்றுபட அன்பையும், சகிப்புத்தன்மையும், ஏற்றுக்கொள்ளுதலையும் மட்டுமே போதிக்கும் மதங்கள் இன்றுவரையில் செய்ததுதான் என்ன? "எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே" என போதித்த, போதிக்கும் மதங்கள், குறிப்பாக தத்தமது கடவுள்களையும் வழிபாட்டு முறைகளையும் வாழ்க்கை நெறிகளையும் மட்டுமே போதிப்பதுவும் பரப்ப நினைப்பதுவும் ஏன்? கோவிலுக்குள், "அனைவரிடமும் அன்பு செலுத்து" என்று வேதம் ஓதும் மத குருமார்கள், கோவிலுக்கு வெளியே கையேந்தியவர்களிடம் ஒரு நாளும் அன்பு செலுத்துவதில்லையே.. ஏன்? கையேந்தியவர்களை தொடுவதற்குக் கூட கூச்சப்படுகிறார்களே... ஏன்? இந்தியா மட்டுமன்றி அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்காவிலும் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. மதவாதிகள் கடவுளை சேவித்துவிட்டு சக மனிதர்களை மறந்து போகின்றனர்.

          
                              மதங்களால் ஆனது அதிகமானாலும், அழிந்தது அதைவிட அதிகம். எத்தனை உயிர்களை குடித்திருக்கும் ஒவ்வொரு மதமும்?! அழிக்கத்தெரியாத மதங்கள் அழிந்திருக்கிறது, அழிந்துகொண்டும் இருக்கிறது. அன்றிலிருந்து இன்று நடந்த பாஸ்டன் குண்டு வெடிப்பு வரை அனைத்து வன்முறைகளுக்கும் மதச்சாயம் உண்டு. உண்மையாகவே மதத் தொடர்பு இல்லாவிட்டாலும் மதச்சாயம் பூசப்பட்டு அரசியல் நாடகங்கள் நடந்தேறிய கதைகளும் பல உண்டு. பெரும் போர்களாகட்டும், சிறு வன்முறைகளாகட்டும் இனப்படுகொலைகளாகட்டும், எக்காலத்திலும் முதலில் பாதிக்கப் பட்டவர்கள்  உணர்ச்சிகளால் உந்தப்பட்ட சாமானியர்களேயன்றி, தலைவர்களோ, அரசாள்பவர்களோ அல்ல. இவ்வழியில் யோசித்தலானால் இரு யூகங்கள் என் மூளைக்கு எட்டுகிறது. 1. முதலில் நல்லவர்களால் எழுதப்பட்ட மதங்களை, மத உணர்வுகளை, பின்நாட்களில் வந்த தலைவர்களும் மன்னர்களும் அரசியல் லாபங்களுக்காக தவறுதலாக திரித்து பிரகடனப் படுத்தியிருக்கலாம்.. அல்லது 2. முதலில் எழுதியவர்களே தம் மார்க்கம் சார்ந்த மக்கள் மட்டுமே தழைத்தோங்க வேண்டும் என்ற கொடிய எண்ணத்துடன் எழுதியிருக்க வேண்டும். 

       
                            காரணம் எதுவானாலும் மதரீதியாக  நாம் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும், காயப்படுதிக்கொண்டும், அழித்துக் கொண்டும் இருக்கிறோம், நேரடியாக அல்லாவிடினும் மறைமுகமாக, என்பதை மறுப்பதற்கில்லை. மதங்களின் புனிதம் காக்க போர் நடத்துகிறோம். அடித்தாலும் சிரி என்று மதங்கள் கூறியது என்னாயிற்று? மதங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் உண்மையாகவே இருந்திருப்பானாயின் இவையெல்லாம் நடந்திருக்குமா? 



                               சிறுவயதில் என் அம்மா சொன்னதையெல்லாம் உண்மையென  நம்பியிருக்கிறேன். அனைத்து அம்மாக்களும் சொல்வதுதான். "இவ்வுலகத்தை படைத்தது கடவுள். மனிதர்களை படைத்தது கடவுள். அவன் அனைவரிடத்தும் அன்பு கொண்டவன். கேட்பதெல்லாம் வாரி வாரி இறைப்பவன். அதனால்தான் அவன் இறைவன்." பகுத்தறியும் திறன், என்னுள் வந்தவுடன் தான் தெரிந்தது அம்மாகூட என்னிடம் பொய் சொல்லுவாள் என்று. அனைவரையும் உருவாக்கியவன், அனைவரிடமும் அன்பு கொண்டவன், ஏன் ஒரு சிலருக்கு மட்டும் சில குறைகளைக் கொடுக்க வேண்டும்? வாரி வாரி கொடுப்பவனானால் குறைகளை நிவர்தியாவது செய்யலாமே. என்னிடமே பொய் சொல்லிவிட்டாள் என் அம்மா. அவளைச் சொல்ல வைத்தது அவளது நம்பிக்கை. அவள் நம்பிக்கை வீண்போகாமல் இருக்க இன்றளவும் அவளுக்காக அவள் கூறிய எல்லாம் வல்ல இறைவனை நான் தொழுகிறேன்.


                            
                             இறைவன், அண்ட சராசரத்தையும், ஒட்டுமொத்த மனித குலத்தையும், ஜீவராசிகளையும் படைத்தவனே ஆகட்டும். ஆனால் அவனுக்கே உயிரும், உருவமும் கொடுத்தது "எல்லாம் வல்ல மனிதன்". நம்மைப்போன்ற ஒருவனால் இயற்றப்பட்டவைதான் கடவுளும் மதமும். இவைகளை நாம் விட்டொழியும் நாளில் தான் மாயந்தொழிந்த  மனிதம் மீண்டும் உயிர்த்தெழும். மதம் படித்த மனிதன் மதம் பிடித்த மனிதனாவதற்கு முன்பாக மனிதம் மீண்டும் உயிர்த்தெழும் என்ற நம்பிக்கையோடு


                                                                                           -போ.ரவிச்சந்திர பிரகாஷ் .