மழலைப்பருவமும் முத்தமும்
ஏழு வயது. காலை ஆறு மணி. அவள் எழுந்து, வீட்டை சுத்தம் செய்து, வாசல் தெளித்து, கோலம் போட்டு, முன் இரவு வைத்த பாத்திரங்களை தேய்த்து முடித்து, அப்பாவுக்கு காபி போட்டு குடுத்து, 7 மணியளவில் என் நெற்றியில் முத்தமிட்டு, என்னை எழுப்பி, குளிக்க வைத்து, சீருடை அணிவித்து, உணவிட்டு, பின் காலணி அணிவித்து, நிமிர்ந்து என்னிடம் ஏதோ பேச நினைப்பாள், மிகச்சரியாக அந்நேரம் பள்ளிப்பேருந்து வந்திருக்கும். மீண்டும் என் கன்னத்தில் முத்தமிட்டு, பேருந்து படியேற்றி "பையன பாத்துக்கோங்க" என ஓட்டுநரிடம் சொல்லி, விரைந்து சென்ற பேருந்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள் தாய்.
அதே நாள், அதே நேரம், காலையில் எழுந்து சிகரட் பிடித்து, காபி குடித்து, நாம் எழும்பும் முன்பே மைதானம் போய் விளையாடி விட்டு, அவர் வீடு திரும்பும் நேரம், நாம் சீருடை காலணி அணிந்து கொண்டிருப்போம் அல்லது பள்ளிப் பேருந்தில் ஏறியே இருப்போம். வெகு சில நாட்களில் அவர் சீக்கிரம் வந்துவிட்டு "கண்ணா ஸ்கூல்க்கு லேட் ஆகுதுல்ல சீக்கிரம் சாப்பிடு" என்பார். இது ஒரு வீட்டில் மட்டுமல்ல, அநேகமாக, தமிழகத்தில் பெருவாரியான வீடுகளில் நடப்பதுதான். அப்பாவிடம் சரியாக பேச முடியாதது தமிழக பிள்ளைகளின் சாபக்கேடு போலும். கடைசியாக அப்பாவிடம் பெற்ற முத்தம் மட்டும் ஏனோ நினைவிலேயே இல்லை.
பள்ளியில் இறங்கிய அந்த நிமிடம் என் மனதில் (இன்றளவும்) தோன்றுவதெல்லாம் ஒன்றுதான். "நாம் ஏன் இவ்வளவு பெரிய மூட்டையை சுமக்கிறோம்?" நானும் பேருந்து நண்பர்களும் சேர்ந்து பேசிக்கொண்டே வகுப்பறையில் போய் அமர்வோம். பள்ளி முடிந்து, வரிசையில் நின்று பேருந்து ஏறி வீட்டுக்குச் சென்றதும், வாசலில் நின்று, நான் இறங்கியதும் என் தோளிலிருந்து பையை இறக்கி, கன்னத்தில் முத்தமிட்டு உள்ளே அலைதுசெல்வாள் என் அம்மா. பின்னர் நீராட்டி, பாராட்டி, சோறூட்டி, சீராட்டி உறங்க வைப்பாள் என்னை. உறங்கியபின்னும் என்னை முத்தமிட்ட பின்னே அவள் உறங்குவாள்.
பள்ளியில் தோழர்களைவிடவும் தோழிகள் அதிகம் இருந்த காலம் அது. சில வருடங்கள் கழிந்தன. வருடங்கள் கழிந்த மாதிரியே தோழிகளின் எண்ணிகையும் கழிந்தன. ஒரு நாள், வகுப்பின் விதிகளில் ஒன்றானது இது "ஆண் மாணவர்கள் பெண் மாணவர்களிடம் பேசக்கூடாது". சிறு வயதிலேயே தவறான எண்ணங்களை புகுத்துவது இதுமாதிரியான வகுப்பறைதான் போலும்.
அம்மாவின் முதல் முத்தமும் முதல் ஸ்பரிசமும் நமக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை, ஆனால் தோழியின் முதல் ஸ்பரிசமும் முத்தமும் நம் நினைவினில் இல்லாமல் இருக்க வாய்ப்பேயில்லை... நான் அப்படி பெற்ற முதல் முத்தம் என் பள்ளிப் பருவத்தோழியிடமிருந்து. ஏன் பெற்றேன்? எதற்காக பெற்றேன்? எப்போது பெற்றேன்? இதெல்லாம் சரியாக நினைவில் கொள்ளவில்லை எனினும், அவள் இதழ்கள் என் கன்னத்தில் பதிந்தது மட்டும் நினைவில் நிற்கிறது. அன்றிலிருந்து நானும் அவளும் மூன்று வெவ்வேறு பள்ளிகளுக்கு மாறியும் தொடர்ந்து தொடர்பிலேயே இருந்தோம். எனக்கொரு நல்ல தோழியாக அவள் இன்றும் என்னுடன் பயனப்படுகிறாள்...
அடுத்து பதின்பருவமும் முத்தமும் .
குளிக்க என்பது சரியானது
回复删除தவறுதலை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.
回复删除தவறு திருத்தப்பட்டுவிட்டது. மேலும் தவறுகள் இருந்தால் தெரியப்படுத்தவும். மிக்க நன்றி.
回复删除